4121.

     சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
          தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
     நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
          நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபேர் ஒளியே
     வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
          விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
     சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
          தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

உரை:

     சுத்த தத்துவத்தின் மேலுள்ள பரவித்தை, பரவீசுரம், பரவிந்து, பரநாதம் ஆகிய நான்கும் அவற்றின் அகம், புறம், தூலம், சூக்குமம் என வரும் நந்நான்கும் தூய ஒளி வடிவில் திகழச் செய்து, அழியாத பரம்பரமாய் முதல் இடை கடையாய் நீடுகின்ற பெரிய பரசிவ நிலையில் நிருத்தமிடுகின்றதாகிய பெரிய ஒளிப் பொருளாகிய சிவனே! ஞானத்தாற் காண்டலுறும் சுத்த தத்துவ புவனங்களும் அவற்றைத் தம்முட்கொண்ட அண்டங்கள் யாவும் விளக்கமுறச் சுடர் பரப்பி நிற்கின்ற அருட் சுடரே! உண்மை ஞானவின்பம் நுகரும் சிந்தனையாளர்கள் புகழ்ந்தோதுகின்ற அம்பலத்தில் தனிநடம் புரிகின்ற அருளரசே! யான் சாற்றுகின்ற சொன் மாலையையும் ஏற்று அணிந்தருள்வாயாக. எ.று.

     சுத்த பரம், சுத்த மாயா தத்துவம், அதன் மத்தகத்துறுவது நாதம். அதற்கு மேலன பரவித்தை, பரவீசுரம், பரவிந்து, பரநாதம் நான்குமாகும். பரநிலையில் சதாசிவத்துக்கு இடமில்லையாதலின் நான்குமே கொள்ளப்பட்டன. பரசிவநிலை இவற்றிற்கெல்லாம் முழுமுதலாதல் பற்றி, “நித்த பரம்பர நடுவாய் முதலாய் அந்தமதாய் நீடியவோர் பெருநிலை” என மொழிகின்றார். சத்திய ஞானம், - உண்மை ஞானம். தத்துவந்தோறும் கண்டுரைக்கப்படும் உலகங்களும் அண்டங்களும் தத்துவ ஞானிகட்கு விளக்கமாதலைக் குறித்தற்கு, “வித்தமுறும் சுத்த பரலோகாண்டம்” எனப் பகர்கின்றார். வித்தம் - ஞானம். சித்தர் - சிந்தனையாளர். சித்தத்தில் வைத்துக் காண்பவர் என்றற்குச் “சித்தர்” என்று செப்புகின்றார்.

     (32)