4122.

     சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
          தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
     ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
          உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
     தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
          துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
     போற்றுகின்ற மெய் அடியர் களிப்பநடித் தருளும்
          பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

உரை:

     நிவிர்த்தி முதலாகச் சொல்லப்படுகின்ற கலையைந்தனுள், அந்நிவர்த்திக்கு மேலுள்ள பிரதிட்டை, வித்தை, சாந்தி, அதீதை என்ற நான்கினும் அவற்றின் உள்ளீடாக விரியும் அகம், புறம், தூலம், சூக்குமம் நந்நான்கிலும் நிறைந்து மிகுகின்ற அகம், புறம், மேல், கீழ், நடு என்ற பக்க வகைகளிலும் செறிந்து தற்சிவமயமாய்த் திகழ்கின்ற ஒளிப்பொருளாகிய பரம்பொருளே! இக் கலை வகைகளில் தோன்றுகின்ற புவனங்கள், அண்டங்கள் யாவற்றிலும் சுடர் பரப்பி விளக்குகின்ற சிவபரஞ் சுடரே! திருமுன்னின்று துதிக்கின்ற மெய்யடியார்கள் மகிழ்வுற அம்பலத்தில் நடித்தருளும் கூத்தப் பெருமானே! யான் புகலும் சொல் மாலையை ஏற்று மகிழ்ந்தருள்க. எ.று.

     நிவிர்த்தி முதலிய கலைவகை யைந்தின் இயல்புகளையும், இவற்றுள் காண நிற்கும் புவனங்களின் இயல்களையும் சிவஞான போதச் சிவாக்கிர பாடியத்தும் சிவஞான மாபாடியத்தும் காண்க. கலைக்குள்ளடங்கும் புவனம் கலையுலகம் எனப்படுகிறது. அல்லும் பகலும் இடையறவின்றித் துதிப்பதால், “போற்றுகின்ற மெய்யடியார்” என்று புகழ்கின்றார். புகல் - புகன்றுரைக்கப்படும் சொன்மாலை.

     (33)