4123. நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
உரை: ஐந்தாகவுரைக்கின்ற ஓங்காரத்தின் பரமாகிய வாசகம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என்ற நான்கினும், அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என நந்நான்காய் விரியுமாறு நிறுத்தி அவற்றினிடத்தும் நிறைந்து, தொகுக்கப்பட்ட ஞானப்பொருள் போல மானத விலக்கியமாய் உள்ளத்தே இனிது நின்று விளங்குகின்ற இன்பவொளியாகிய பரசிவனே! பிரணவாகாரமாய் அமைந்த உலகுகளிலும் அண்டங்களிலும் நிலைபெற இருந்து ஒளி பரப்பித் திகழ்கின்ற சிவபரஞ்சுடரே! பாட்டு வகைகளைக் கொண்டு பராவுகின்ற மெய்யன்பர்கள் தொழுது துதிக்க அம்பலத்தில் நடிக்கின்ற பரம நடத்தையுடைய நடராசப் பெருமானே, எனது இப்பாட்டையும் ஏற்றருள்க. எ.று.
அகார வுகார மகாரமாகிய வன்ன ரூபத்தைக்கொண்டு, பிரணவமென நாட்டப்பட்டமை புலப்பட, “நாட்டிய ஓங்காரம்” எனவும், மானதம், வாசகம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என ஐந்தாயினும், மானதம் அபரமாகலின், ஏனை நான்கையும், “பர முதல் நான்கு” எனவும் இயம்புகின்றார். செம்பொருள் - ஞானப்பொருள். இதுவும் படிப்படியாய்ப் பெருகும் தன்மையதென்பது தோன்ற, “ஈட்டிய செம்பொருள்” என இசைக்கின்றார். அகார வுகார மகாரங்கள் கூட்டொளியாதலால், “கூட்டிய ஓங்காரம்” என்றும், இதுவும் தத்துவம், கலைகள் ஆகியவை போலப் புவனாண்டங்கட்கு இடமாவதென்பது விளங்க, “ஓங்காரவுலகு ஓங்கார அண்டம்” என்றும் உரைக்கின்றார். பாவும் பாவினமும் எனப் பாட்டியல் பலவாதலால், எல்லாம் அடங்கப் “பாட்டியல்” எனப் பொதுப்படக் கூறுகின்றார். பரமநடம் - மேலான திருக்கூத்து; பஞ்ச கிருத்திய நடனம் எனினும் அமையும். (34)
|