4124. மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
உரை: சிவத்தின்கண் நிலைபெறுகின்ற சத்திகளுள் அபர சத்திக்குப் பரமாகிய சத்திகள் பலவாம்; அவற்றுள் வகுத்துரைக்கும் சத்தி வகைகள் யாவும் அவ்வச் சத்தர்களின் இடமெங்கும் அமைந்த வகையையுரைக்கின்ற பற்பல வகையாகிய விசித்திர சித்திரங்களிற் பரந்து விளங்குமாறு பதித்துத் திகழும் சிவவொளியே; சேர்ந்துள்ள அபர சத்திகளின் புவனங்களும் அண்டங்களும் நலம் பெறற் பொருட்டு அருட் கதிரைப் பரப்பியொளிர்கின்ற அருட் சுடரே! நினைக்கின்ற அன்பர்களின் மனம் மகிழத் திருச்சிற்றம்பலத்தில் ஓங்குகின்ற நடனத்தையுடைய அருளரசே! என் சொன் மாலையையும் ஏற்றருளுக. எ.று.
சிவ பரம்பொருளில் ஒடுங்கியிருக்கும் சிவசத்தி மிகப் பலவாய் விரிதலின், அவற்றைப் பரம் எனவும், அபரமெனவும் பகுத்துக் காணும் அறிஞர், அபர சத்திக்கண் பல்வேறு சத்திகளைக் கண்டுரைத்தலால், “மன்னுகின்ற பரமாதி” என்றும், அச்சத்திகட்கு இடமாகிய சத்தர்கள்பால் அவை நிலைபெறுவது காட்டற்கு, “அவற்றுள் வயங்கு நிலையாதியெலாம் வயின் எல்லாம் பற்பலவாம்” என்றும் கூறுகின்றார். சத்திகள் தங்குவதற்குரிய சத்தர் அவற்றிற்கு இடமாதலின், “வயின்” என்கின்றார். வயின் - இடம். சத்தரிடத்தே தங்கும் சத்திகளின் வியாபாரம் சைத்திரியமாகவும் விசித்திரமாகவும் நிலவுதல் பற்றி, அவை இனிது விளங்குமாறு, “விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கிப் பதித்தருளும் பதியே” எனப் பராவுகின்றார். சத்தியின் செயல் வகைகள் பொருள் தோறும் பதிந்து இயக்கினாலன்றித் தொழில் வகைகள் இயங்காமை புலப்பட, “பரவி விளங்கிட விளங்கிப் பதித்தருளும் ஒளியே” என வுரைக்கின்றார். பலவாகிய சத்திகளும் தத்துவங்களாதலின், அவற்றிற்கமைந்த புவனங்களையும் அண்டங்களையும் நினைப்பிப்பாராய், “துன்னபர சக்தி உலக பரசத்தி அண்டம்” என விளம்புகின்றார். பன்னுதல் - சொல்லுதல். துன்னுதல் - சேர்தல், செறிதலுமாம். (35)
|