4125.

     விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
          விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
     களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
          காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பேர் ஒளியே
     உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
          ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
     வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
          மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.

உரை:

     சிவசத்தி வகைகளில் பரசத்தி வகைகள் பலவாதலால் அவற்றுள் எண்ணிறந்து நிற்கும் பரசத்தி சத்தர்கள் முதலாகிய யாவும் சிவவொளி பரந்து சிறக்க, களங்கம் யாதும் இல்லாத பரசத்தி வெளியாகும் பரவெளியில் முதலிடை கடையெனப் பகுக்கலாகாதவாறு எங்கும் நிறைந்து யாவற்றிலும் கலந்து ஒளிதரும் பரசிவவொளியாகிய பெருமானே! உள்ளத்தாற் காணலுறும் பரசத்தி தத்துவ புவனங்கள் அண்டங்கள் முழுதும் ஒளி பெற்றோங்க அருட்சுடரைப் பரப்பி நிலவும் சிவச் சுடரே! அருள்வளம் பொருந்திய அம்பலத்தில் பெரிய திருக்கூத்தையியற்றுகின்ற பரசிவனே! என் சொன் மாலையையும் உவந்தேற்று அணிந்தருளுக. எ.று.

     முன்னைப் பாட்டில் அபர சத்தி நிலைகளையுரைத்த வடலூர் வள்ளல் இப்பாட்டில் பரசத்தி நிலைகளையுரைக்கின்றார். பரசத்தியின் வியாபாரம் நிலவுமிடத்தைப் பரவெளியெனவும், அஃது ஆதியந்தம் நடு எனக் கூறுசெய்து காணவியலாதது என்றற்கு, “அந்த முதல் நடுத்தான் காட்டாதே” எனவும் இயம்புகின்றார். பேரருள் நிலையமாதலால், திருவம்பலத்தை, “வளங் குலவு திருப்பொது” என்று சிறப்பிக்கின்றார். சொன் மாலையைச் சொல்லாலாகிய மாலையென விளக்குதற்கு, “சொல்லெனும் ஓர் மாலை” என்று விளம்புகின்றார்.

     (36)