4126.

     தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
          சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
     பரிந்தஒரு சிவவெளியில் நீக்கம்அற நிறைந்தே
          பரமசுக மயமாகிப் பரவியபேர் ஒளியே
     விரிந்தமகா சுத்தபர லோகஅண்ட முழுதும்
          மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
     புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
          புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

உரை:

     மகாசுத்தம் எனப்படும் சுத்த 'தத்துவத்தின் மேலுள்ள, மாயாதீதமாகிய முதற்பொருளும், அதன் வகைகளும் மேம்பட்ட நிலைகளும் தெளிவாக விளக்கம் பெற அமைந்த ஒப்பற்ற சிவ வெளியில் நீக்கமற நிறைந்து பெரிய இன்ப மயமாய்ப் பரந்துள்ள பெரிய ஒளிப் பொருளே! மகாசுத்தமாகிய தத்துவத்திலுள்ள பர புவனங்களும் அண்டங்களும் நிலவும் சச்சிதானந்த நிலையை விளக்குகின்ற சுடர்ப்பொருளாகிய சிவ பரம்பொருளே! செய்த தவப் பயனாக விளங்குகின்ற அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருளரசே! தாழ்ந்தது என்று இகழாமல் என்னுடைய சொல் மாலையை மகிழ்வுடன் ஏற்று அணிந்தருளுக. எ.று.

     சுத்த மாயைக்கு அப்பாலான அண்மைப் பரவெளியை “மகா சுத்தம்” எனக் குறிக்கின்றார். அவ்வெளியில் மகாசுத்தாவித்தை முதல் மகாசுத்த நாதம் வரை ஐந்து உள்ளனவாதலால் அவற்றை, “மகாசுத்த பரமுதலும் அவற்றுள்ளே சிறந்து நிலையாதிகளும்” என்று கூறுகின்றார். அவைகள் மாயையின் கலப்பின்றித் தூய இன்பமயமாக விளங்குவதால் அவற்றின்கண் சிவவொளி குறைவற நிறைந்து ஒளிர்கின்ற இயல்பை, “ஒரு சிவவொளியில் நீக்கமற நிறைந்து பரமசுக மயமாகிப் பரவிய பேரொளியே” என்று விளக்குகின்றார். ஐந்தாக “விரிந்து மகாசுத்தப் பகுதியாய் இலகுவது பற்றி அதனை, “விரிந்த மகாசுத்தம்” என்று விளம்புகின்றார். அவையும் மாயாதீதத் தத்துவங்களாகக் கொண்டு அவற்றுள் நிற்கும் புவனாண்டங்களை, “மகாசுத்த பரலோக அண்டம்” என்று பகருகின்றார். அவற்றுள் நிறைந்து விளங்குவது சச்சிதானந்தம் எனத் தெரிவித்தற்கு, “மெய்யறிவானந்த நிலை” என்று சொல்லுகின்றார். திருவம்பல நடனக் காட்சி கண்டு மகிழ்வார்க்கு அவர் செய்த தவப் பயனாக அமைதலால், “புரிந்த தவப் பயனாகும் பொது” என்று புகழ்கின்றார். புன்மொழி - குற்ற மிகுதியால் தாழ்வுடைய சொன் மாலை.

     (37)