4127.

     வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
          மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
     ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
          ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பேர் ஒளியே
     தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
          சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
     வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
          விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.

உரை:

     மாயாதீதச் சிவவெளிக்கு மேலதாகிய பரவியோமமும், அதன்கண் விரியும் ஐவகைப் பரநாத முதலிய நிலைகளும் நிறைந்த ஒளி விளங்க அறிவுடையோரால் நுணுகிக் காணப்பட்ட சிவவெளியில் வெளி யுருவாய் அவ்வெளியில் இயலும் பொருள்கள் எல்லாவற்றின் இயல்புகளையும் விளக்கித் தெரிவிக்கும் பேரொளியாகிய சிவ பரம்பொருளே! அவ்வெளியில் கலந்துள்ள பரநாத தத்துவ புவனாண்டங்கள் எல்லாவற்றிலும் ஒளி பரப்பி விளக்கமுறுகின்ற தூயதாகிய பரசிவ தனிச் சுடரே! பொன் வேயப்பட்ட அழகிய அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற அருளரசே! இங்கே சொல்லுகின்ற என் சொல் மாலை இனிது விளங்க நின் தோளில் அணிந்தருளுவாயாக. எ.று.

     சுத்த மாயா மண்டலத்துக்கு அப்பால் மேலுள்ள வியோமமாகிய பரநாத வெளியை, “வாய்ந்த பரநாதம்” எனவும், அதன்கண் நிலவுகின்ற பரநாதம் முதலிய தத்துவ நிலைகளையும் தன்னுள் அடக்கி நிற்கும் பராகாசத்தைச் சிவவெளி என்றும் வடலூர் வள்ளல் குறிப்பாராய், “பரநாதம் ஐந்தில் பரமுதலும் அவற்றுள் மன்னு நிலையாதிகளும் வயங்கியிட நிறைந்தே ஆய்ந்த பரசிவவெளி” எனவும் இயம்புகின்றார். நிலைகள் என்றது பரநாத, பரவிந்து முதலிய தத்துவ நிலை ஐந்தையுமாகும். சிவவெளியில் இந்நிலைகள் தத்துவ வடிவின்றி ஆகாச மயமாய் நிற்பதால், “வெளி யுருவாய்” என்றும், அவற்றைத் தனது சிவமயமாய்க் காணச் செய்தலின், வெளி யுருவாய் எல்லாமாகிய தன் இயல் விளங்கச் செய்கின்றமை புலப்பட, “எல்லாமாகிய தன்னியல் விளக்கி” என்றும் இசைக்கின்றார். எல்லாமாகிய தன்னியல் - எப்பொருளும் எவ்வுயிரும் எல்லாம் சிவமயமாக்கும் பரசிவத்தின் பண்பு இப் பரநாத வெளியில் கலந்துள்ள பரவிந்து முதலிய தத்துவங்களுக்குரிய புவனாண்டங்களில் சிவ பரம்பொருள் தனது சிவவொளியைப் பரப்பி எல்லாம் சிவமயமாய் விளங்கச் செய்து, தான் அவற்றால் விகாரப் படாது தனிப் பரஞ் சுடராய்த் தனித்தோங்குகின்ற தன்மை தோன்ற, “சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனிச் சுடரே” என்று துதிக்கின்றார். தில்லையம்பலம் பொன்னால் வேயப்பட்டிருப்பது பற்றி அதனை, “வேய்ந்த மணி மன்று” என்று சிறப்பிக்கின்றார். “தூய செம்பொன்னினால் எழுதி வேய்ந்த சிற்றம்பலம்” (கோயில்) என்று திருநாவுக்கரசர் எடுத்துரைப்பது காண்க.

     (38)