4128. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
உரை: கல்லார், கற்றவர், கண்களால் காண்பவர், காணாதவர், செயல் வல்லவர், மாட்டாதவர், மதியாதவர், மதிப்பவர், நல்லவர், பொல்லாதவர், நரர்கள், தேவர்கள் ஆகிய எல்லார்க்கும் பொதுவாய் அம்பலத்தில் திருக்கூத்து ஆடுகின்ற சிவ பரம்பொருளே! என்னுடைய அருளரசே! யான் சொல்லுகின்ற சொன் மாலையை ஏற்று உவந்தருளுக. எ.று.
கல்லார் - கற்றலைச் செய்யாதவர். “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்று பொரியோர் கூறினும் அவர்களுக்கும் நல்லது கண்டு மகிழுமாறு செய்பவன் என்றற்கு, “களிப்பருளும் களிப்பே” என்று கூறுகின்றார். களிப்புச் செய்கின்ற சிவனைக் 'களிப்பு' என்று கூறுகின்றார். காணார் - குருடர். கண்டவர் - கண்களால் காண்பவர். கண்களால் காண்பவர் நல்லது கண்டு மகிழச் செய்விப்பது போலக் குருடர்க்கும் அறிவுக்கண் தந்து நல்லவன் நலம் கேட்டு உண்மை கண்டு உவக்கச் செய்தலால் சிவனை, “கண்ணளிக்கும் கண்ணே” என்று சிறப்பிக்கின்றார். வல்லவர் செய்தற்குரியவற்றைச் செய்து முடிக்க வல்லவர். செய்ய மாட்டாதவர்களை “மாட்டார்” எனப் பொதுப்படக் கூறுகின்றார். வரம் - செய்து முடிக்கும் வன்மை. வரம் தருபவனை “வரம்” என்று போற்றுகின்றார். மதியார் - பொருளின் உண்மை யுணர்ந்துகொள்ளாதவர். அவர்களுக்கும் உண்மையறிவு தந்து வாழ்விப்பது பற்றி, “மதி கொடுக்கும் மதியே” என்று சிவனை வாழ்த்துகின்றார். நல்லார் - நீதி நெறியில் ஒழுகுபவர். நீதி நெறியை மதியாதவர்களைப் “பொல்லார்” என்றும், நல்லார் பொல்லார் என்ற இரு திறத்தார்க்கும் நடுவில் நீதியுருவாய் நின்று அருளுவதால், “நடு நின்ற நடுவே” என்றும் பராவுகின்றார். நரர்கள் - மண்ணுலக மக்கள். சுரர்கள் - மேலுலகத்தில் வாழும் தேவர்கள். இவ்விரு திறத்தார்க்கும் நன்மையே செய்வது பற்றிச் சிவபெருமானை, “நலங் கொடுக்கும் நலமே” என்று நவில்கின்றார். ஆடவர், பெண்டிர், சிறியவர், முதியவர், செல்வர், வறியர், இளைஞர், முதியர், உயர்ந்தார், தாழ்ந்தார் என்ற வேறுபாடின்றி யாவர்க்கும் பொதுவாய் யாவரும் கண்டு மகிழ்ந்து வணங்கி வாழ்த்த அம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்றான் சிவபெருமான் என்று தெரிவித்தற் பொருட்டு, “எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே” என்று போற்றுகின்றார். இசை - சொல் மாலை. சொல்லுக்கு இசை என்பதும் பெயராதலால் இசை என்றும் இயம்புகின்றார். (39)
|