4129. காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
உரை: கண்களால் கண்ணாரக் கண்டு களிக்குமாறு அமைந்த காட்சிப் பொருளாகவும், கையாலும் உடம்பாலும் தொட்டு அறியத் தக்க பரிசப் பொருளாய், மூக்கினால் நுகர்வார்க்கு நறுமணம் கமழும் பொருளாய், கூர்த்த செவிகளுக்கு இனிய ஓசைப் பொருளாய், வாயால் சுவைத்தற்கினிய பெரிய சுவைப் பொருளாய், வேதமாகிய மரத்தின் உச்சியில் பழுத்து எனக்குக் கிடைத்த பெரும் பழமாய், எவ்வுயிரும் அருள் பெறுமாறு ஒளி யுடையதாகிய திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்ற அருளரசே! எனது இச் சொல் மாலையை உவந்து அணிந்தருள்க. எ.று.
கற்பொறியால் காணத் தக்க பொருள்களும் காட்சி இன்பம் தருவதால் அவையும் சிவமே எனக் கருதி, “காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்” எனக் கூறுகின்றார். உளதாய் - உள் பொருளாய். பரிசித்தல் - தீண்டுதல். தீண்டிய வழிப் பிறக்கும் ஊற்றின்பத்தையும் சிவம் எனக் கருதும் சிறப்புத் தோன்ற வடலூர் வள்ளல், “கையும் மெய்யும் பரிசிக்கச் சுக பரிசத்ததுவாய்” என்று சொல்லுகின்றார். பரிசித்து உண்டாகும் ஊற்றின்பம் சிவபோகம் என்று நினைக்கின்றாராதலால், “சுகப் பரிசத்ததுவாய்” என்கின்றார். சுகந்தம் - நறுமணம். நாசி - மூக்கு. மூக்குணர்வின் நலம் மனத்தால் எண்ணி அறியப்படுதலின் சூழ்ச்சியுற நாசிக்கும் சுகந்தம் செய்குவது சிவம் என உணரப்பட்டமை அறிக. சொல்வதை நுணுகிக் கேட்டுணரும் செவியைத் தூய செவி எனவும், செவியாற் கேட்கும் போது இன்பம் தரும் ஓசையைச் சுகநாதம் எனவும் சொல்லுகின்றார். உண்பொருளின் பெருமை அதன் இனிய சுவையால் விளங்குதலின், “மாட்சியுற வாய்க்கினிய பெருஞ் சுவை” என்று குறிக்கின்றார். வேத ஞான முடிவில் உணரப்படுகின்ற இன்ப ஞானப் பொருளாதலால் சிவ பரம்பொருளை, “மறைமுடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே” என்று வாழ்த்துகின்றார். தனது திருவருளாகிய பேரொளி கொண்டு உலகுயிர்களை ஆட்சி புரிவது பற்றி, “ஆட்சியுற அருள் ஒளியால் திருச்சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே” என்று உரைக்கின்றார். (40)
|