4130.

     திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
          சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
     விரை இலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
          மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
     பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில்பழுத்தே
          படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
     உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
          ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

உரை:

     சுருக்கமில்லாததாயும், அழியாததாயும், தோல் இல்லாததாயும், சிறிதும் விதையில்லாததாயும், சாறு கசியாததாயும், நிறைந்த கோதில்லாததாயும், நாற்றமில்லாததாயும், வண்டுகளால் துளைக்கப்படாததாயும், உள்ளே நாறுகள் இல்லாததாயும், உண்மையேயுருவாகி அருளே நிறமாய் விளங்கி, இன்பமயமாய்ச் சத்தி வெளிக்கு அப்பாலதாய் விளங்குகின்ற ஒப்பற்ற பரசிவ வெளியில் பழுத்துக் கையில் தந்து எனது உள்ளம் இனிக்குமாறு கிடைத்த தனிச் சிவமாகிய பழமே! புகழப்படுகின்ற பெரிய வேதங்களெல்லாம் துதித்துப் போற்ற அழகிய அம்பலத்தில் உயர்ந்து விளங்கும் திருக்கூத்தை ஆடுகின்ற அருளரசே! எனது சொல் மாலையையும் உவந்து அணிந்தருள்க. எ.று.

     திரை - சுருக்கம். நரை - திரை என்றாற்போல. சினைப்பு - விதையுடையதாதல். பளித்தல் - சாறு கசிதல். விரை - மனம். புரை - வண்டுகளால் செய்யப்படும் துளை. திரை முதலிய குற்றங்கள் உலகியற் பழங்களுக்கு உளவாதலின் அவற்றின் வேறுபடுத்தற்கு இங்ஙனம் எடுத்தோதுகின்றார். மெய்ம்மையே சிவத்தின் தோற்றமாதலால், “மெய்யே மெய்யாகி” எனவும், அருளே உருவாதலால் “அருள் வண்ணம் விளங்கி” எனவும், சிவம் இன்பமயமாதல் பற்றி, “இன்ப மயமாய்” எனவும் இயம்புகின்றார். மாயா வெளிக்கு அப்பால் உறுவது சத்தி வெளியாகிய பரைவெளிக்கு மேலதாய் விளங்குவது சிதாகாசப் பரைவெளியாதல்பற்றி, “பரைவெளிக்கு அப்பால் விளங்கு தனிவெளி” என்றும், அதன்கண் உளதாய் உயர்ந்து ஒளிர்தலின், “தனிவெளியில் பழுத்து” என்றும் கூறுகின்றார். படைத்தல், அழித்தல், உரை புகழ் தொன்மையும், உயர்வும், வலிமையும், உடையவை எனப் போற்றப் படுவதால் வேதங்களை, “உரை வளர் மாமறை” எனப் புகழ்கின்றார். மறைகளெல்லாம் என்றவிடத்து, மறை என்றது வேதங்கள் எல்லாவற்றையும் ஓதியுணர்ந்த மேலோர்களை என அறிக. மணிப்பொது - அழகிய அம்பலம்.

     (41)