4131.

     கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
          கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
     சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
          தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
     பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
          படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
     ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
          ஓங்கியபேர் அரசேஎன் உரையும்அணிந் தருளே.

உரை:

     கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு, புளிப்பு, காய்ப்பு முதலியன இல்லாமல் பிற சுவையுடைய பொருள்களில் சேராததாய், எக்காலத்தும் விகாரப்படாததாய், உயிர்களுக்குச் சிறிதளவும் துன்பம் தரும் குற்றம் ஒன்றும் இல்லாததாய், பறவைக்குஞ்சு ஒத்த என்னுள்ளத்தில் விளங்கி ஞானவின்பம் உண்டாக மெய்ம்மையான தவப்பயனால் எனக்குக் கிடைத்த ஒப்பற்ற சிவமாகிய பழமே! மெய்யுணர்வு உடைய பெரியோர்களைப் போற்றித் துதிக்க அழகிய அம்பலத்தின்கண், ஞான வெளியாய் உயர்ந்த பேரருளரசனாகிய பெருமானே! என்னுடைய சொல் மாலையையும் மகிழ்ந்து அணிந்தருள்க. எ.று.

     கார்ப்பு - காரம். மிளகின் சுவையொத்தது. துவர்ப்பு - பாக்கின் சுவைபோன்றது. உவர்ப்பு - உப்பின் சுவையுடையது. காய்ப்பு - எரிப்பது. பிற என்றது இச் சுவைதனில் இரண்டும் பிறவும் கலந்த சுவையுடைய பொருள்கள். திரிபு - விகாரம். தினைத்தனையும் - சிறிதளவும். பார்ப்பு - பறவைக்குஞ்சு. படைத்திடல் - உண்டாதல். ஓர்ப்புடையார் - நலந் தீங்குகளில் குற்றமாகிய தீங்கினை நீக்கி நலத்தையே உள்ளவாறு உணர்வும் நல்லறிவுடைய பெரியவர். அம்பலத்தின்கண் சிதாகாசமாய்த் திகழ்வது பற்றிச் சிவனை, “வெளியாய் ஓங்கிய பேரரசு” என்று குறிக்கின்றார்.

     (42)