4132.

     தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
          திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
     ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
          உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
     பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
          பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
     பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
          பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.

உரை:

     திருவொற்றியூருக்குப் போய் ஓர் வீட்டுப் புறத் திண்ணையில் நான் பசியால் வருந்திப் படுத்துச் சோர்ந்திருந்தபொழுது கையில் ஒளி பொருந்திய ஒரு கிண்ணத்தில் சோறு கொண்டு என்னை எழுப்பிப் பசித்தனையோ என்று சொல்லி மகிழ்வுடன் எனக்குக் கொடுத்தருளிய, என் உயிர்க்கு இன்பம் தரும் தாயாகியவனே! என் உள்ளத்தில் உள்ள பற்றனைத்தும் தன்னுடைய திருவடிக்கண் கொண்ட பற்றாக ஏற்றருளி என்னை வாழ்வித்த நற்பண்புடைய தந்தையாகியவனே! பெருந்தன்மை பொருந்திய சான்றோர்கள் சுற்றி நின்று துதித்துப்போற்ற அழகிய அம்பலத்தின்கண் பெரிய திருக்கூத்தையாடுகின்ற கூத்தப்பெருமானே! என்னுடைய சொல் மாலையையும் அணிந்து மகிழ்ந்தருளுக. எ.று.

     தெற்றி - வீட்டின் புறத்திண்ணை. திருவமுது - உண்ணும் சோறு. அழுக்கில்லாத தூய கிண்ணம் என்பதற்கு, “திகழ் வள்ளம்” என்று தெரிவிக்கின்றார். ஒற்றி - திருவொற்றியூர். உயிர்க்கினிதாம் தாய் - உயிர்க்கு இன்பம் தருவதாகிய அன்புடைய தாய். பற்று - நான் எனது என இருவகையாகத் தோன்றும் ஆசைகள். இவை உலகியலில் இயல்பாகவே வந்து பற்றுபவையாதலால், “பற்றிய பற்று” என்று பகர்கின்றார். உள்ளத்தில் எழுகின்ற பற்றுக்களைத் தன் திருவடிக்கண் அமைந்தனவாக ஏற்று உவந்தருளினமை புலப்பட, “பற்றனைத்தும் தன் அடிப்பற்றாகப் பரிந்தருளி எனையீன்ற தந்தையே” எனப் புகழ்கின்றார். பண்பு - அருட் பண்பு. பெற்றி - தன்மை; ஈண்டு உயர்ந்த தன்மைகளை யுடைய மெய்யன்பர்களைக் குறிக்கின்றது. பிதற்றல் - வாயில் வந்தன சொல்லுதல்.

     (43)