4133. தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
உரை: தாய் தந்தை முதலியரோடு, சிறு பருவத்தில் தில்லைத் திருக்கோயிலுக்கு நான் சென்றபொழுது, அங்குள்ள திரை நீக்கப்பட்ட காலத்தில் நான் கூத்தப்பெருமானைத் தரிசித்தேனாக, குறிப்பு வகையாலன்றி எனக்கு எல்லாம் இனிது வழங்க யான் காண உதவிய எனக்கு உண்மையுறவாகிய பரம்பொருளே! காயாதலின்றி எனது சிந்தையின்கண் பழுத்துக் கனிந்த மணம் கமழும் பழமாகியவனே கனவின்கண்ணும் நனவின்கண்ணும் என்னை விட்டுப் பிரியாமல் உடனிருந்து மகிழ்வித்த சிவமே! தூய உள்ளம் படைத்த பெரியோர்கள் துதிக்க அழகிய அம்பலத்தின்கண் கூத்தாடுகின்ற சோதி நடனத்தையுடைய அருளரசாகிய பரம்பொருளே! என் சொல் மாலையையும் ஏற்று அணிந்து மகிழ்ந்தருள்க. எ.று
தாய் தந்தை, உடன் பிறந்தார் ஆகியோருடன் தில்லைக்குச் சென்றிருந்தாராதலின் “தாய் முதலோர்” என்று கூறுகின்றார். சிறிய பருவம் - பிள்ளைப் பருவம். வேய்வகை என்றவிடத்து வேய் என்றது குறிப்பு மொழி. குறிப்பாய்க் காட்டாமல் எல்லாம் இனிது விளங்கத் தாம் காணுமாறு தில்லை அம்பலவாணன் தனது நலமனைத்தும் அவர் வடலூர் வள்ளல் இனிது கண்டு இன்புறுமாறு காட்டிய அருள் நலத்தை நினைந்து மொழிகின்றாராதலால், “வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டிய என் மெய்யுறவாம் பொருளே” என்று வடலூர் வள்ளல் தமது பிள்ளைப் பருவத்தில் பெற்றோருடன் தில்லைக்குச் சென்றதும், அங்கே திரைக்குள் மறைக்கப்பட்டிருந்த சிவ ரகசியங்கள் அனைத்தையும் தாம் இனிது கண்டு இன்புற்றதும் இதனால் தெரிவிக்கின்றார். எல்லாம் என்பது கூத்தப் பெருமானுடைய பொற்சடைவடிவில் அமைந்திருக்கும் சிவ ரகசியம். அது மறைபொருளாதலின்றி நன்கு விளங்கத் தெரிந்தமை கூறுவாராய், “என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டிய என் மெய்யுறவாம் பொருளே” என்று விளம்புகின்றார். பிஞ்சு, காய் என்ற வகையின்றி முற்றக் கனிந்த பழம் என்றற்கு, “காய் வகையில்லாது கனிந்த நறுங்கனியே” எனக் கூறுகின்றார். சிவஞானத்தால் உள்ளத்தின்கண் சிவம் பழுத்தமை தெரிவிப்பாராய், “உளத்தே கனிந்த கனியே” என வுரைக்கின்றார். மனம், மொழி, மெய், அறிவு ஆகியவற்றால் தூய நினைவும், தூய சொல்லும், தூய செயலும், தூய ஞானமும் உடைய பெருமக்களை, “தூய்வகையோர்” என்று சொல்லுகின்றார். திருவருள் ஞான ஒளி பரப்பும் திருக்கூத்தாடுவது பற்றிச் சிவபெருமானை, “சோதி நடத்தரசே” என்று புகழ்கின்றார். (44)
|