4134. ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
உயர்ந்தஒட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
ஏங்கியஎன் ஏக்கம்எலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
இலங்குநடத் தரசேஎன் இசையும் அணிந் தருளே.
உரை: உயர்ந்த துணைவர் ஒருவருமின்றித் தனியாக ஒரு வீட்டின் உயர்ந்த ஒட்டுத் திண்ணையிலே கடையவனும் சிறியவனுமாகிய யான் படுத்துறங்கியபோது, நள்ளிரவில் மிக்க தூக்கத்தால் புரண்டு விழுந்தேனாக, தரையில் விழாதவாறு தூக்கியெடுத்து மார்பில் அணைத்துக் கீழே கிடத்தி அருளிய உண்மைத் துணைவனாகிய பெருமானே! நான் தாங்கியிருக்கின்ற என் உயிர்க்கு இன்பம் தந்தருளிய பெருந் தகைமையையுடைய சிவனே! என்னுடைய சற்குருவே! நான் செய்த தவத்தின் பயனாக உள்ள சிவ பரம்பொருளே! அம்பலத்தில் விளங்குகின்ற திருக்கூத்தாடும் கூத்தப் பெருமானே! ஏங்கிய என் ஏக்கமெல்லாம் போக்கி, என் சொல் மாலையையும் அணிந்து மகிழ்ந்தருள்வாயாக. எ.று.
உற்றவிடத்துத் துணைபுரியும் நண்பர்கள் “ஓங்கிய துணை” எனப்படுவர். பாதி இரவு - நள்ளிரவு; நடுவிரவு என்றுமாம். ஒட்டுத் திண்ணை - சுவரை ஒட்டி அமைக்கப்படும் புறந்திண்ணை. போதிய அகலமில்லாத புறந் திண்ணை என்பது புலப்படுத்தற்கு, “ஒட்டுத் திண்ணையிலே படுத்தேன்” என்று உரைக்கின்றார். உயர்ந்த திண்ணையாதலால் தவறி விழுந்தால் ஊறு உண்டாகும் என்று கருதி அணைத்தெடுத்துத் தலையில் படுக்கவைத்த பாங்கு புலப்பட, “தரையில் விழாது தூக்கியெடுத்து அணைத்துக் கீழ்க் கிடத்திய மெய்த்துணையே” என்று கிளந்து கூறுகின்றார். உயிர்க்கு இன்பமாவது ஞானவின்பம்; அதனைத் தந்தமை பற்றிச் சிவபெருமானை, “பெருந்தகையே” எனவும், “சற்குருவே” எனவும் பாராட்டுகின்றார். அந்த ஞானமும் பெருந்தவத்தாலன்றிப் பெறலரியது என்பாராய், “நான் செய் பெருந்தவப் பயனாம் பொருளே” என்று செப்புகின்றார். ஏங்கிய என் ஏக்கம் - தன் சொல் மாலை ஏற்கப்படுமோ படாதோ என உள்ளத்தில் ஏங்கிய வழிப் பிறந்த ஏக்கம். இசை - ஈண்டு ஆகுபெயராய்ச் சொல் மாலையைக் குறிக்கின்றது. (45)
|