4135. தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறும்அவ் வருத்தம்எலாம் தவிர்த்தருளி மகனே
பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
உரை: தனிப்பட்ட சிறியவனாகிய யான் இவ்வாழ்வில் சிறிது மனம் வருந்தியபோது அதனைத் தனக்குற்ற வருத்தமாகக்கொண்டு பொறாது அப்பொழுதே மனம் நடுங்கச் செய்யும் வருத்தம் அத்தனையும் போக்கி, “மகனே உனக்கு ஏன் பயம்” என்று சொல்லி என்னை அன்போடு அணைத்துகொண்ட குருபரனே! இனிமையான நல்ல சொற்களைச் சொல்லி என் தலைமீது மலர் போன்ற திருவடிகள் இரண்டனையும் வைத்து என்னை ஆண்டுகொண்ட என் உயிர்க்கு நல்ல துணைவனான பெருமானே! நன்கு கனிந்த சுவையுடைய கனி போல்பவனே! என் கண்ணே! ஞான சபையில் திருநடனம் புரிகின்ற அருளரசே! நான் எண்ணித் தொடுக்கும் என் சொல் மாலையையும் ஏற்று உவந்தருளுக. எ.று.
தனி மகனாகவும், சிறுமையுடையவனாகவும் தன்னைக் கூறுவாராய், வடலூர் அடிகள் தம்மை, “தனிச் சிறியேன்” என்று கூறுகின்றார். எனக்குற்ற வருத்தத்தைத் தனக்கு எய்தியதாகக் கொண்டு மனம் தாங்காமல் அப்பொழுதே வந்து அவ்வருத்தத்தைப் போக்கிய அருட் செயலை, “வருந்தியபோது அதனைத் தன் வருத்தம் எனக்கொண்டு தரியாது அக்கணத்தே பனிப்புறும் அவ்வருத்தம் எல்லாம் தவிர்த்தருளி” என்று இயம்புகின்றார். தனித்தல் - தாங்குதல். பனிப்புறல் - மனம் நடுங்குதல். அபயம் அளித்து ஆண்டு கொண்டமை புலப்பட, “மகனே பயம் உனக்கு என்னென்று என்னைப் பரிந்து அணைத்த குருவே” என்று பகருகின்றார். பரிந்தனைத்தல் - அன்போடு தழுவிக்கொள்ளுதல். இனிப்புறும் நல்மொழி - கேட்டற்கு இனிமை நல்கும் நல்ல சொற்கள். மலர்க்கால், குருபரனாய், எழுந்தருளி அன்பு மொழிகளால் தழுவிக்கொண்டு தலைமேல் தன் திருவடிகளைச் சூட்டி அடியவனாக்கிக் கொண்டான் பெருமான் என்பாராய், “என் முடி மிசையே மலர்க்கால் இணை யமர்த்தி எனை யாண்ட என்னுயிர் நற்றுணையே” என்று மொழிகின்றார். கனிந்த கனி என்பது கனித்த கனி என்று வலித்தது. நன்கு கனிந்த கனி சுவை மிக்கதாகலின் அதனை உவமித்துக் கனித்த நறுங்கனியே என்று சிவனைச் சிறப்பிக்கின்றார். சிறந்த உறுப்பாதல் பற்றிக் கண்ணாக உருவகம் செய்து, “என் கண்ணே” என அன்பு மிகுதியைப் புலப்படுத்துகின்றார். சிற்சபை - ஞான சபை. கருத்து - எண்ணிப் பாடும் பாட்டு மனத்தால் எண்ணிப் பாடுவது பற்றிப் பாமாலையைக் கருத்து எனக் குறிக்கின்றார். (46)
|