4136.

     ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
          உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
     பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
          பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
     திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
          செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
     கருமடம்தீர்த் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
          காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

உரை:

     என்பால் பெண்ணொருத்தி வந்து என்னோடு வலியக் கலந்து நீங்கிய பிறகு, என்ன காரியம் செய்தோம் என்று நான் மனம் வருந்தி, மெலிந்தபொழுது மிக்க அறியாமையுடையவனே, உனக்குக் கெட்டது ஒன்றுமில்லை; நம்முடைய பெரிதாகிய செயல் என்று சொல்லி என்னைத் தெளிவித்து அருளிய பெருந்தகைப் பெருமானே! அழகிய பெண்கள் இருவரை என்னெதிரே நடிக்கப் பண்ணி என் மனத்தையும், திண்ணியதாக்கி என் குற்றமெல்லாம் நீக்கியருளிய சிவனே! பிறவிக் கேதுவாகிய அறியாமையைப் போக்கின ஞானிகள் எல்லோரும் நோக்கிப் பராவ, அழகிய அம்பலத்தின்கண் கூத்தாடுகின்ற அருளரசே! என்னுடைய பாமாலையையும் ஏற்றணிந்து உவந்தருளுக. எ.று.

     ஒருகால் இளம் பெண்ணொருத்தி வலிய வந்து கலந்து நீங்கினாளாக அவளோடு கூடிய குற்றத்திற்காக வருந்திய திறத்தை, “என் செய்தோம் என்று அயர்ந்தபோது” என விளம்புகின்றார். வருந்துதற்கு ஏதுவாகிய குற்றத்தைப் பெருமடம் என்று குறிக்கின்றார். மடந்தை யொருத்தி வந்ததும் அவளோடு கூடியதும் அருட் செயலே என்று சொல்லி, அயர்கின்ற அறிவைத் தெளிவித்தமை இனிது விளங்க, “என் கெட்டது ஒன்றுமில்லை நம் பெருஞ் செயல் என்று தேற்றிப் பிடித்த பெருந்தகையே” என்று உரைக்கின்றார். தெளிவுற்றமை புலப்பட, “திருமடந்தைமார் இருவர் என்னெதிரே நடிக்கச் செய்தருளிச் சிறுமையெலாம் தீர்த்த தனிச் சிவமே” எனப் புகழ்கின்றார். கருமடம் தீர்ந்தவர் - பிறவிக் கேதுவாகிய அறியாமையிலிருந்து நீங்கின ஞானவான்கள். பாட்டு என்பது பாமாலையை.

     (47)