4137.

     இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
          இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
     பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
          போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
     மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
          மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
     அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
          அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

உரை:

     ஒருநாள் இரவு ஒரு வீட்டு மூலைத் திண்ணையில் நான் பசியால் உண்டாகிய இளைப்புற்றுப் படுத்திருந்தேனாக, என்னைத் தேடி வந்து இனிய உணவு கொடுத்து என் பசியைப் போக்கி, எனக்கு அருள் புரிந்த என் புண்ணிய உருவாகிய நல்ல துணைவனே! மயக்கம் தரும் இரவுகள் எனக்கு உண்டாகாதபடி நீக்கி, எல்லா வாழ்வும் எனக்களித்து அழகிய மேடை மேல் பல்லோர் நடுவே நான் வீற்றிருக்குமாறு வைத்த ஒப்பற்ற மணி போன்றவனே! திருவருள் ஞானமாகிய உணவைத் தந்து என்னை ஆட்கொண்டருளிய சிவ பரம்பொருளே! அம்பலத்தாடும் அருளரசே! என்னுடைய சொல் மாலையை ஏற்று அணிந்து மகிழ்ந்தருளுக. எ.று.

     இருளிரவு - நிலவொளி யில்லாத இராப் பொழுது. சத்துள்ள நல்ல உணவு என்றற்கு, “பொருள் உணவு” என்று புகல்கின்றார். பசித்து மெலிந்திருக்கும் பொழுது தான் இருக்குமிடம் தேடி வந்து பசி தீர உணவளித்தமையின் “புண்ணிய நற்றுணையே” என்று புகழ்கின்றார். மயங்கி இருந்த காலத்தை மருளிரவு என்று குறிக்கின்றார். செல்வ வாழ்வும் திருவருள் ஞான வாழ்வும் பெற்றிருந்தமை புலப்பட, “எல்லா வாழ்வும் எனக்கருளி” எனவும், பலர் கூடியிருந்த மேடையில் தலைமையிடத்தில் தம்மை வீற்றிருக்குமாறு சிறப்பித்தமை தோன்ற, “நடு இருக்க வைத்த ஒரு மணியே” எனவும் உரைக்கின்றார். திருவருள் ஞானத்தை அருளமுதம் என வழங்கும் முறைமை பற்றி, “அருளுணவு” என இயம்புகின்றார்.

     (48)