4138. நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
ஒள்ளியதெள் அமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
உரை: நான் பசித்து வருந்தியபோதெல்லாம் தான் பசியுற்றது போல, வருந்தி நல்ல உணவு கொணர்ந்து கொடுத்து, என் உடல் வளம் பெற என்னை வளர்த்து, உடம்பிடத்தே பசியும் களைப்பும் எப்பொழுதும் தோன்றாதபடி ஒள்ளிய தெளிந்த ஞானமாகிய அமுதத்தை இவ்விடத்தே எனக்கு மகிழ்வுடன் கொடுத்தருளிய ஞான வொளியாகிய பெருமானே! தேவர்கள் வல்லவனாகிய இந்திரனுக்கும், திருமாலுக்கும், பிரமனுக்கும் பெறுதற்கரியதாகிய செல்வ வாழ்வு எனக்கு அமையுமாறு வரம் தந்துதவிய தலைவனே! தேன் நிறைந்த பூவில் எழும் மணம் போல்பவனே! அழகிய அம்பலத்தின்கண் ஞான நடனம் செய்கின்ற அருளரசே! சிறுமையுடைய என் சொல் மாலையை மகிழ்ந்து ஏற்று அணிந்தருளுக. எ.று.
தான் உற்று வருந்திய பசித் துன்பத்தை நன்கறிந்து அது தீர்த்தற்கு ஏற்ற நல்லுணவு கொடுத்தமையின், “தான் பசித்ததாகி” என்று உரைக்கின்றார். நல்லுணவு - சுவை மிக்க உணவு. செல்வமுற வளர்த்தலாவது உடல் வளம் பெறச் சத்து நிறைந்த உணவு கொடுத்தும், உடுக்க உயர்ந்த ஆடை கொடுத்தும் தந்து ஓம்புதல். ஊன் உடம்பில் தோன்றும் பசியும் இளைப்பும் அறிவைச் சிதைத்தலால், “ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே” என்றும், திருவருள் ஞானவமுதம் ஊனுடம்பையும் உயிர் உணர்வையும் ஒருசேர வளமுற வளர்க்கும் ஒட்பம் உடையதாதலால், “ஒள்ளிய தெள்ளமுது எனக்கு இங்கு உவந்தளித்த ஒளியே” என்றும் கூறுகின்றார்.
வான்பதி - வானத்திலுள்ள தேவர்களுக்கு அரசனாகிய இந்திரன். தேவதேவர்களும் பெற முடியாத உயர்ந்த அருள் ஞான வின்ப வாழ்வினைத் தாம் பெறுதற்குரிய நல்வாய்ப்பினைத் தந்தமை விளங்க, “வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வெனக்கே ஆகியுற வரமளித்த பதியே” என்று இசைக்கின்றார். தேன் நிறைந்த மலரே நல்ல மணம் கமழ்வதாதலால், “தேன் பரித்த மலர் மணமே” என்றும், மலரிடத்தில் எழும் மணம் போல உலகியற் பொருள்களில் கலந்திருப்பது பற்றிச் சிவ பரம்பொருளை “மலர் மணமே” என்றும் ஓதுகின்றார். “உற்ற யாக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்” (அதிசய) என்று மாணிக்கவாசகர் உரைப்பது காண்க. சிவபெருமான் ஊன நாடகத்தையே யன்றி ஞான நாடகத்தையும் அழகுற ஆடுபவன் என்று சான்றோர்கள் உரைப்பதால், “திருப்பொதுவில் ஞானத் திருநடஞ் செய்அரசே” என்று போற்றுகின்றார். தமது சிறுமையைத் தாம் பாடுகின்ற சொல் மாலை மேலேற்றி, “என் சிறு மொழி” என வடலூர் வள்ளல் எடுத்தோதுகின்றார். (49)
|