4139. நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பேர் ஒளியே
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
உரை: உலகியல் வாழ்வின்கண் ஒழுக்கத்துக்குரிய ஒரு நல்ல நண்பனாய் யான் கருதிய பொருள்கள் எல்லாவற்றையும் ஒரு நாழிகைப் பொழுதில் பெறுமாறு எனக்குதவி, என்னுடைய அகத்தும், புறத்தும், அகப்புறத்தும் சிறந்த ஒளியுடன் உயர்ந்த மெய்க்கிளை என்னும் பேரொளியே! படைத்தல் முதலிய ஐந்து தொழிலும் நீ செய்கவென அருள் புரிந்து, எனக்கிருந்த அச்சத்தைப் போக்கி என் மனத்தின்கண் எழுந்தருளுகின்ற ஒப்பற்ற தலைவனே! கீழ்மையுற்ற என் கையில் ஒரு கங்கணமும் அணிந்தருளிய சிதாகாசத்தில் திருநடம் புரிகின்ற அருளரசே! யான் கருதித் தொடுக்கின்ற சொல் மாலையையும் ஏற்று அணிந்தருளுவாயாக. எ.று.
உலகியல் வாழ்வில் நல்லொழுக்க நெறியின்கண் இயலுதற்குரிய நண்பன் நல்ல நண்பனாவன்; அந்நெறியில் சிவ பரம்பொருள் தம்மை நன்னெறியில் ஒழுகுமாறு துணை புரிவது விளங்க, “உலகிடை நடைக்குரிய ஒரு நல்ல நண்பனாகி” என்று நவில்கின்றார். நம்பியாரூரரும், “என்னுடைய தோழனுமாய்” என்று சிவபெருமானைக் கூறுவர். தனக்கு வேண்டப்பட்ட பொருளை வேண்டிய பொழுதே உதவுபவன் நல்ல நண்பன் என்பது புலப்பட, “நல்ல நண்பனாகி நான் குறித்த பொருள்கள் எல்லாம் நாழிகை ஒன்றதிலே கிடைக்க எனக்களித்து” என இயம்புகின்றார். நல்ல நண்பனாதலோடு தனக்கே யுரிய ஞான நிலையில் நீங்காமல் நின்றமை தோன்ற, “அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய்க்கிளை என்னும் பேரொளியே” என்று கூறுகின்றார். மெய்க்கிளை - மெய்ம்மையான சுற்றம். ஒளி மயமான ஞானத் திருவுருவினனாதலால், “பேரொளியே” என்று புகழ்கின்றார். படைப்பு முதல் தொழில் ஐந்தும் சிவனுக்கே உரியவாயினும், சிவமாம் தன்மை உண்டாயினமை விளங்க, “படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க எனக் குறித்தே” என்றும், அச்சம் உயிர்ப் பண்பாதலால் அது நீங்கினாலன்றிச் சிவமாம் தன்மை கை வராது என்பது கொண்டு, “பயம் தீர்த்து” என்றும், அது மீண்டும் தோன்றாதவண்ணம் இறைவன் உடனிருப்பது பற்றி, “என் உள்ளகத்தே அமர்ந்த தனிப் பதியே” என்றும் இயம்புகின்றார். கங்கணம் - கையில் அணியும் வளை வகைகளில் ஒன்று. ககன நடனம் - ஆகாசத்தில் ஆடும் திருக்கூத்து. ஈண்டு ஆகாசம் என்பது ஞானமாகிய ஆகாசம். பாட்டெல்லாம் கருத்திற் தோன்றிச் சொல்லுறுக் கொள்வதால் சொல் மாலையைக் கருத்து எனக் கூறுகின்றார். (50)
|