4140.

     நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
          நேர்காண வந்தனம்என் றென்முடிமேல் மலர்க்கால்
     தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
          தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
     ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
          எனக்கிலையோ என்றருளி எனைஆண்ட குருவே
     தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
          தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

உரை:

     மகனே! நீ மெய்யில் நினைத்த நலங்கள் எல்லாவற்றையும் யாம் நன்கு அறிந்துகொண்டோம்; ஆதலால், நின்னை நேரில் காண வந்தோம் என்று சொல்லி என்னுடைய மடி மேல் மலர் போன்ற திருவடியை நிலைபெற வைத்து, அதன்கண் படுத்தாயாக, நான் எனது செருக்கினால் அத்திருவடியை எடுத்து அப்புறத்தே வைத்தேனாக, குறுநகை செய்து நீ என்ன நினைக்கின்றாய்; இவ்வளவு சுதந்திரம் உன்பால் எனக்கு இல்லையோ என்று வாய் மலர்ந்து என்னை ஆட்கொண்ட குருபரனே! தேனின் சுவையுடைய இனிய பாகும், சர்க்கரையும், கனியும் போல்பவனே! அம்பலத்தின்கண் தெய்வ நடனம் புரிகின்ற சிவனே! சிறுமையுடைய எனது சொல் மாலையை ஏற்றுக்கொண்டு அணிந்தருளுக. எ.று.

     நன்மை - நலங்கள். நல்ல ஞான எண்ணங்கள் என்றுமாம். கனம் தோன்றாதபடி, மடிமேல் காலைவைத்துப் படுத்தமை விளங்க, “மடிமேல் மலர்க்கால் நிலைக்க வைத்தருளிப் படுத்திட” என்று பகர்கின்றார். செருக்கு - நான் எனது என்னும் உணர்வு பிறப்பிக்கும் மயக்கம். நகை - அறியாமை கண்டு செய்த புன்னகை. மடிமேல் கால்வைத்துப் படுக்கும் உரிமை இவ்வளவு சுதந்திரம் என்று சுட்டப்படுகிறது. சிறுமை - தாழ்ந்த தன்மை.   

     (51)