4141. மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
பரநாத நாட்டரசு பாலித்த பதியே
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
உரை: பிரமன் முதலிய மும்மூர்த்திகளும் நெடுங்காலம் தவம் செய்தாலும், அவர்களால் அறிய முடியாத ஞான முடிவுகள் அனைத்தையும் அறிந்துகொள்ள நினைத்த ஒரு நாளிலேயே அன்புடன் நான் அறியுமாறு எனக்கு அறிவித்து, அடியேனுடைய உள்ளத்தைத் தனக்கு அமைந்த இடமாக்கிக் கொண்டு எழுந்தருளும் அருள் ஞான குருமுதல்வனே! மண்ணுலக வேந்தரும் தேவர்களும் பணிந்து மகிழ்ந்து துதிக்கப் பரநாத தத்துவ உலகத்தில் அருளரசு புரியும் பரசிவமாகிய தலைவனே! சிறப்புப் பொருந்திய அம்பலத்தின்கண் இன்பத் திருக்கூத்தாடும் அருளரசே! என்னுடைய இந்தச் சொல் மாலை விளக்கமுறத் திருவடியில் அணிந்தருளுக. எ.று.
பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரையும் மூர்த்திகள் என்பர். உண்மை ஞான நெறியில் விளங்கும் முடிபுகளின் அருமையுணர்த்தற்கு, “மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவெல்லாம்” என மொழிகின்றார். முன்னுதல் - நினைத்தல். ஆர்த்தி - அன்பு. ஞான முடிபுகளைத் தமக்கு அறிவித்துத் தமது மனத்தின்கண் ஞானப் பொருளாய் விளங்குவது தோன்ற, “முடிவெல்லாம் அறிய எனக்கு அளித்தருளி அடியேன் அகத்தினைத் தன்இடமாக்கி அமர்ந்த அருட்குருவே” என்று பரவுகின்றார். பார்த்திபர் - மண்ணுலகவேந்தர். பரநாத நாடு - பரநாத தத்துவ புவனம். அரசு பாலித்தல் - அரசாய் ஆட்சி புரிதல். (52)
|