4142. இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே.
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
உரை: ஒன்றிலும் ஆசையில்லாமல் இருந்த எனக்கு, இப்பொழுது சன்மார்க்க நிலையின்கண் ஆசையையுண்டாக்கி அதற்குப் பொருத்தமான வேறு முயற்சிகள் பலவற்றைச் செய்யும்தோறும் அவற்றிற்கு உலகறியத் தடை உண்டாக்கிப் பின்பு அவற்றை நீக்கியருளிய ஞான குருவே! எல்லாச் சமயங்களின் முடிபுகளும் திருச்சிற்றம்பலத்தின்கண் இருக்கின்றன என்று எனக்குத் தெரிவித்து, என் மனம் பொருந்துவித்த இறைவனே! முவ்வுலகத்தவரும் புகழுமாறு அழகிய சபையின்கண் நடிக்கின்ற முதல்வனாகிய அருளரசே! என்னுடைய சொல் மாலையையும் ஏற்று அணிந்து மகிழ்ந்தருளுவாயாக. எ.று.
எப்பொழுதும் ஆசையில்லாத தமது மனத்தின்கண் சன்மார்க்க உண்மையைத் தோற்றுவித்து, அதையே மேற்கொள்ளுமாறு தமது அறிவைத் தூண்டினமையால் “சன்மார்க்க நிலைக்கு இச்சையே உண்டாக்கி” எனவும், அதற்குரிய முயற்சிகளோடு வேறான முயற்சிகளைச் செய்யும்போதெல்லாம் தடைகளை உண்டாக்கிப் பிறகு உலகத்தவர் அறியும்படியாக அத் தடைகளை அறிவறிய உணர்த்தி, நெறியில் நிறுத்தினமை விளங்க, “பிற முயற்சி செயுந்தோறும் அவற்றைத் தடையாக்கி உலகறியத் தடை தீர்த்த குருவே” எனவும் கூறுகின்றார். சன்மார்க்க ஞானம் இயற்கை அறிவின்கண் தோன்றி விளங்குவது என்றற்கு, “இயலுறு சன்மார்க்க நிலை” என்றும், உரிய முயற்சியை மேற்கொள்ளாமல் வேறு முயற்சியில் ஈடுபட்டுத் தடைபட்டமையும், பின்னர் ஞானவுரைகளால் தெளிவுற்றமையும் புலப்பட, “பிற முயற்சி செய்யும்தோறும் தடையாக்கித் தடை தீர்த்த குருவே” என்றும் இயம்புகின்றார். சமயங்கள் பலவும் பரம்பொருள் ஒன்றே என்று முடிவுக்கு வருதலால் அதனைத் தெளிவிக்கும் இடம் திருச்சிற்றம்பலம் என்பதை யுணர்த்தற்கு, எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம்பலத்தே இருந்த எனத் தமக்கு அறிவுறுத்தினார் என்பாராய், “எனக்கருளி இசைவித்த இறையே” என்று மொழிகின்றார். இசைவித்த என்பதனால், தொடக்கத்தில் வடலூர் வள்ளல் அவ்வுண்மையை இயலாதிருந்தமை புலப்படும். தச்சுறு - பொருந்த. பிற முயற்சி - உரியன அல்லாத முயற்சிகள். முவ்வுலகம் - மேலுலகு, கீழ் உலகு, நடு வுலகு ஆகிய மூன்றுமாம். இவற்றை முறையே விண், மண், பாதளம் என்பதுண்டு. (53)
|