4143. கையாத தீங்கனியே கயக்காத அமுதே
கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
போகாத புனலேஉள் வேகாத காலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே
குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
உரை: கைத்தல் இல்லாத இனிய கனியும், கசப்பு இல்லாத அமுதமும், கரையாத கற்கண்டும், உள்ளே புரையோடாத கரும்பும், கெடாத பெருவாழ்வும், புகையில்லாத நெருப்பும், பள்ளம் நோக்கி ஓடாத நீரும், உள்ளிருந்து வெந்து படிதலில்லாத காற்றும், கொய்யப்படாத மணமலரும், கோக்கப்படாத மணியும், கடற்குள் மூழ்கி எடுக்கப்படாத பெரிய முத்தும், மறைக்கப்படாத வெளியுமாகியவனே! எவராலும் செய்யப்படாத பெரிய உதவியைச் செய்தருளிய பெருந்தகையாகிய பெருமானே! அம்பலத்தின்கண் தெய்வ நடனம் புரிகின்ற அருளரசே! சிறுமையுடையவனாகிய என்னுடைய சொல் மாலையை உவப்புடன் ஏற்று மகிழ்ந்தருளுவாயாக. எ.று.
தீவிய கனியாயினும் கைத்து ஒடுக்கப் படாதது என்றற்கு, “கையாத தீங்கனியே” என்றும், எவ்வாற்றாலும் கசப்புச் சுவை பெறாதது என்றற்கு, “கயக்காத அமுதே” என்றும், வாயில் இட்ட வழிக் கரைந்தொழியும் உலகியற் கற்கண்டு போல்வதன்று என்றற்கு, “கரையாத கற்கண்டே” என்றும், கரும்பு வளருமிடத்து உள்ளே பூச்சிகள் நுழைந்து புரைபடுத்துவதால், அக்கரும்பின் வேறுபடுத்தற்கு, “புரையாத கரும்பே” என்றும் புகழ்ந்துரைக்கின்றார். புரை - குற்றம். நிலைபெற்ற இன்பமே வினவுதலால் பெருமை அமைந்த பெருவாழ்வை நல்குவது பற்றி, “பொய்யாத பெருவாழ்வே” எனவும், நெருப்புப்போலும் நிறமுடைய திருமேனியுடையவனாதல் பற்றிச் சிவனை, “புகையாத கனலே” எனவும், நீர்போல அருளுருவாய் நிலைபேறு உடையவனாய் நிற்றல் பற்றிச் சிவ பரம்பொருளை, “போகாத புனலே” எனவும், உடற்குள் ஊடுருவி வெம்மையைச் செய்யினும் வெந்து கெடுக்காத உயிர்க் காற்றைப்போல உயிர்க்குள் உயிராய் நின்று உண்மையுணர்வு அருளுவது பற்றி, “உள் வேகாத காலே” எனவும் இறைவனைப் போற்றுகின்றார். ஞான மணம் கமழும் மலர் போல்வது பற்றிச் சிவபெருமானை, “கொய்யாத நறுமலரே” என்றும், மாணிக்க மணிபோல் செம்மேனியுடையவனாதலால் உலகியல் மனிதரின் வேறுபடுத்தற்கு, “கோவாத மணியே” என்றும், உலகியலில் முத்துக்கள் கடலில் மூழ்கியெடுக்கப்படுவதுபோல நீர் அணிந்த மேனியுடன் பெரிய வெண்மை நிறமுடைய முத்துப் போல்பவனாதலால் சிவபெருமானை, “குளியாத பெருமுத்தே” என்றும் இயம்புகின்றார். சூரியன் முதலிய ஒளிப் பொருள்கள் இல்லையாயினும் ஞானிகள் ஞானக் கண்ணுக்கு விளங்கி நிற்கின்றமைபற்றிச் சிவ வெளியை, “ஒளியாத வெளியே” எனவுரைக்கின்றார். மாயா மண்டலத்துக்கு அதீதமாகலின் பரசிவ வெளியில் சிவம் ஒழிய வேறு ஒளிப்பொருள்கள் இல்லையென அறிக. செய்யாத பேருதவி - சிவத்திற்கு ஓர் உதவியும் செய்யாதிருக்க ஆன்மாக்களுக்கு உலகு, உடல், கருவி ஆகியவற்றைப் படைத்து உதவுதல் பற்றிப் பரம்பொருளை, “செய்யாத பேருதவி செய்த பெருந்தகையே” என்று புகழ்கின்றார். இத்தகைய பேருதவியால் பெருந்தக்க பெருமானாதல் பற்றிச் சிவனை, “பெருந்தகை” என்று போற்றுகின்றார். (54)
|