4144.

     எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
          ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
     பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
          பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
     நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
          நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
     அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
          அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.

உரை:

     மானதமாய்ச் சிந்திக்கப்படாத மந்திரமாகியவனே! எழுதப்படாத வேதப் பொருளாகியவனே! தன்னை ஓதிய வேறு எவ்வுயிராலும் அடைந்தறியப்படாத மேனிலையில் நின்று அதனின்றும் கீழ் இறங்காத நிறைபரம்பொருளே! யாவராலும் செய்யப்படாத பூசையின் கண் பாராயணம் பண்ணப்படாத அறிவுப்பொருளே! ஞானப்பாலை உடையவர்க்கு அவர் பார்வையின்கண் உருக் குன்றித் தோன்றுகின்ற ஒண்பொருளே! தன்னை எண்ணாதவர் மனத்தால் எட்டிக் காணப்படாத நன்பொருளே! தன் உண்மையறிந்து நாடுதல் இல்லாதவர் வாழ்வின்கண் தோன்றுதல் இல்லாத செம்பொருளே! எனக்கு அண்ணனே! அப்பனே! அய்யனே! அரசனே! உனது இரண்டாகிய திருவடிகளுக்குச் சூட்டுகின்ற என்னுடைய சொல் மாலையை ஏற்றணிந்து மகிழ்ந்தருளுக. எ.று.

     மந்தம், மானதம், உரை என முவ்வகையாக ஓதப்படும் இயல்புடைய மந்திர வகைகளுள் ஒன்றாலும் எண்ணப்படாத மந்திரப் பொருளாதல் பற்றிச் சிவ பரம்பொருளை, “எண்ணாத மந்திரமே” என்று இயம்புகின்றார். வேதப் பொருளாதல் பற்றி, “எழுதாத மறையே” என மொழிகின்றார். வேதங்கள் ஏட்டில் எழுதப்பட்டு ஓதப்படுவன வல்லவாதலால் அவற்றை, “எழுதாத மறை” என்கின்றார். இது பற்றியே வேதங்களை எழுதாக் கிளவி என வழங்குவர். சிவம் ஒன்றே நின்று திகழும் பரசிவனை மேனிலை எனப்படுகிறது. வேறு எத்தகைய மக்களும் தேவர்களும் சென்றடையாமை பற்றி அதனை “ஏறாத மேனிலை” என்று குறிக்கின்றார். இது பற்றியே சிவனை, “சென்றடையாத திருவுடையான்” (சீராப்பள்ளி) என்று சான்றோர் குறிக்கின்றனர். அப்பரசிவ நிலையில் இருந்து குற்றமுற்று இறங்குவது இல்லையாதல் தோன்ற, “இறங்காத நிறைவே” என்று கூறுகின்றார். நாள்தோறும் செய்யப்படும் சிவபூசை முடிவில் சிவநெறித் திருமுறைகள் படிக்கப்படுவது மரபாதலின், “பண்ணாத பூசையிலே படியாத படிப்பே” என்று பகர்கின்றார். உலகியல் பொருள்களைப் பார்க்காமல் பரம்பொருளையே பார்த்திருக்கும் பரஞானிகளின் பார்வையிலன்றிச் சிவத்தின் திருவருள் ஒளி பார்த்து இன்புறுமாறு தோன்றுவதில்லை என்பதுபற்றி, “பாராத பார்வையிலே பதியாத பதிப்பே” என்று கூறுகின்றார். மெய்யன்போடு சிவனடியை நினையாதார் உள்ளத்தில் அவர் திருவடித் தோற்றம் வலியாது எனப் பெரியோர்கள் கூறுவதால், “நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே” என வுரைக்கின்றார். “கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்” என்று பெரியோர் கூறுவது காண்க. நாடாத நாடு - பரம்பொருள் ஒன்று உண்டு என்பதையறிந்து அதனை அடைய முயலாத மக்கள் வாழும் நாடு. அண்ணுதல் - அடைதல்.

     (55)