4145. சாகாத கல்வியிலே தலையான நிலையே
சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
உரை: அழிதலில்லாத கல்வி யறிவால் அறியப்படும் பொருள்களின் தலைமையான பொருள் நிலையாயும் அமைதியான காற்றின்கண் நின்று முழங்குதல் இல்லாத நெருப்புமாகியவனே! ஓடாத நீரினால் அலைத்தழிக்கப்படாத இனமாகியவனே! குறையில்லாத மந்திரத்தால் பேசப்படாத பரம்பொருளே! கூ கா என்று அழுது உறவினர் கூடி என்னை யெடுக்காதபடியும் என்றும் அழியாது நிற்கின்ற உடம்பை எனக்குக் கொடுத்தருளிய ஒப்பற்ற அமிர்தம் போன்றவனே! பேரன்புடைய பெரியோர்கள் நின்று போற்ற அழகிய அம்பலத்தின்கண் பெரிய நடனத்தைச் செய்கின்ற அருளரசே! என்னுடைய சொல் மாலையை ஏற்று மகிழ்ந்து அணிந்தருளுவாயாக. எ.று.
அழியாச் செல்வமாதலின் கல்வியைச் “சாகாத கல்வி” என்று சிறப்பிக்கின்றார். கல்வி யறிவால் உணரப்படும் பொருள்களுள் தலையாயது சிவாகாசத்தில் விளங்கும் பரஞானப் பரம்பொருள்; அதனுடைய பரஞானப் பரநிலையைத் “தலையான நிலை” என்று சாற்றுகின்றார். ஆகாசத்தினின்றும் காற்றும், அதன் வழி நெருப்பும், அதன் வழி நீரும், அதன் வழி நிலமும் தோன்றுகின்றன என்னும் மரபு பற்றி, “காற்றும் கனலும் புனலும் புவியும்” ஆகிய நான்கையும் முறையே கூறுகின்றார். அசைகின்ற காற்றிடத்தே ஆகாசத்தின் குணமாகிய ஒளி வெளிப்படுதலின் அப்பூதக் கலப்பில்லாத கனலுருவாய் விளங்குவது பற்றிச் சிவனை, “சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே” என்று கூறுகின்றார். நெருப்பு எரியுமிடத்தும் ஒலி எழுதலின், “ஒலியாத கனலே” என வெளிப்படுகின்றார். புனல் ஓடுமிடத்து மண் கரைந்து இடிதல் இயல்பாதலின் அதனை விலக்குதற்கு, “புனலிடத்தே இடியாத புவியே” என்று புகழ்கின்றார். பள்ளம் நோக்கியோடுதல் நீருக்கு இயல்பாகவும், அதனை நீக்குதற்கு, “ஏகாத புனல்” என இயம்புகின்றார். குற்றமில்லாத மந்திரத்தை, “ஏசாத மந்திரம்” எனவும், ஞான நுண்பொருள் குறிப்பால் காட்டப்படுதலின்றி வாயால் உரைக்கப்படுவதில்லை என்பது பற்றி, “பேசாத பொருளே” எனவும் புகழ்கின்றார். மந்திரம் என்பதை ஆராய்ந்தறிவது என்று பொருள் செய்து, மந்திராலோசனைக்கண் வைத்து ஆராயப்படும் பொருள்களின் வேறாதல் விளங்க, “மந்திரத்தே பேசாத பொருளே” என்கின்றார் எனினும் அமையும். கூ, கா என்பது அழுகை ஒலி. உலகியலில் ஒருவர் செத்தவிடத்து உறவினர் கூடிக் கூ, கா என்றழுது எடுத்துப்போவது மரபாதலால், அங்ஙனம் தான் செத்தவிடத்துத் தம்மையெடுத்துப் போய் அடக்கம் செய்தல் கூடாது என்பதற்காக, “கூடி எடுக்காது” என்றும், “குலையாத வடிவு எனக்கே கொடுத்தாய்” என்றும் கூறுகின்றார். குலையாத வடிவு - செத்து மடியாத உடம்பு. மாகாதல் உடையார் - பேரன்புடைய பெரியோர்கள். வழுத்துதல் - வணங்கிப் போற்றுதல். (56)
|