4146.

     சுத்தநிலை அனுபவங்கள் தோன்றவெளி யாகித்
          தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
     நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
          நீயாகி நானாகி நின்றதனிப் பொருளே
     சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
          சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
     புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
          புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

உரை:

     சுத்த நிலையும் அனுபவங்களும் தோன்றுகின்ற அபர வெளியாகியும், அவை தோற்றும் வெளியாகியும், அவற்றைத் தோற்றுவிக்கும் வெளியாகியும், நித்திய நிலைகளில் நடுவே நிறைந்த ஞான வெளியாகியும், நீயாகியும், நானாகியும் நின்ற தனிப் பரம்பொருளே! சத்தியம், சத்துவம், தத்துவம் ஆகியும், புதுமையுறச் சமரச சன்மார்க்க நிலையின் உச்சியில் நிலை நின்ற சிவமே! புதுமை நீங்காத அமுதமே! சித்தி எல்லாம் செய்யவல்ல அம்பலத்தில் தூய நடம் புரிகின்ற அருளரசே! நான் சொல்லுகின்ற சொல்மாலையை ஏற்றணிந்து மகிழ்ந்தருளுக. எ.று.

     சுத்த நிலையும் அதன்கண் நுகரப்படும் அனுபவங்களும் தோன்றுதற்கு இடமாகிய பரவெளியை, “சுத்த நிலை அனுபவங்கள் தோன்றுவெளி” எனவும், அவை தோற்றம் பெறும் வெளியும் அவ்வாறு தோற்றுவிக்கும் வெளியும் சுத்த மாயா மண்டலத்தின் காரியங்கள் என்பது பற்றி, “தோற்றுவிக்கும் வெளி” எனவும் சொல்லுகின்றார். மாயாதீத நிலைகள் அழியா இயல்பினவாதலால் அவற்றை, “நித்த நிலைகள்” என்றும், அவற்றின் நடுவில் நிறைந்து விளங்கும் பரவெளியை, “நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி” என்றும் இயம்புகின்றார். இப் பரவெளியின்கண் நிலவும் பரம்பொருள் இதுவென விளக்குதற்கு, “நீயாகி நானாகி நின்ற தனிப் பொருள்” எனக் கூறுகின்றார். சத்திய வடிவமும், சத்துவ உருவும், தத்துவ மயமுமாய் விளங்குவது எனத் தெரிவித்தற்கு, “சத்தியமே சத்துவமே தத்துவமே” என்று சாற்றுகின்றார். சத்தியம் - மெய்ம்மை. சத்துவம் - சத்துவ குண சொரூபம். தத்துவம் - அபர பர தத்துவங்களின் மயமாதல். சமரச சன்மார்க்கம் என்பது, சங்கற்ப விகற்பங்கள் இல்லாத ஞான நெறி நின்ற வெளி பெறப்படும். சிவஞான சிவபோக நிலைக்கண் பெறலாகும் பரம்பொருளை, “சன்மார்க்க நிலைத்தலை நின்ற சிவமே” என மொழிகின்றார். சிவபோகம் நுகருந்தோறும் நுகருந்தோறும் புத்தின்பம் தருதலால், “புத்தமுது” என்று புகழ்கின்றார். சித்தி - காரிய சித்தி, யோக சித்தி, ஞான சித்தி, போக சித்தி எனப் பலவகைப் படுதலால், “சித்தி எலாம்” என்று தொகுத்துச் சொல்லுகின்றார். அம்பலத்தில் ஆடுவது தூய ஞான நடனமாதலால், அதனைப் “புனித நடம்” என்று புகழ்கின்றார்.

     (57)