4147. நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
தான்அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித்
தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
தேன்அளக்கும் மறைகள்எலாம் போற்றமணி மன்றில்
திகழுநடத் தரசேஎன் சிறுமொழி ஏற்றருளே.
உரை: அளவைகளைக் கொண்டு நான் அளந்து காணும் போதெல்லாம் அவ்வளவைகளுக்கு, அமைந்ததுபோல் தோன்றி இவ்வியல்பிற்று என்று துணிந்த பின் அத் துணிபுக்குள் சிறிதளவும் அடங்காதாகி, அதுதான் அளந்து காணும் அளவின்கண் முடிவதாம் என்று காட்டி அதன்பின் தன்னுடைய அளவும் கடந்து அப்பால் நிலை பெறுகின்ற சிவ பரம்பொருளே! தேவர்களும் அளக்க முடியாமல் அனந்தம் கோடி வானவர்களைத் தனக்குள் கொண்ட பெருவானத்தவர்களாலும் அளந்து காண வல்லதாமோ என்று மொழிந்து, தேன்போல் இனிக்கும் வேதங்கள் யாவும் போற்றுகின்ற அழகிய அம்பலத்தின்கண் விளங்குகின்ற நடனங்களைப் புரியும் அருளரசே! சிறுமையுடைய என்னுடைய சொல் மாலையை ஏற்று மகிழ்வாயாக. எ.று.
காட்சி, கருத்து, உரை என்பன முதலாக வுள்ள அளவைகள் இவற்றைப் பிரமாணம் என்பது வழக்கு. இப்பிரமாணங்களால் அளக்கப்படுவது பற்றி, “நான் அளக்கும் தோறும் அதற்குற்றது போல் காட்டி” எனவும், பரம்பொருள் பிரமேயம் எனத் துணிந்த பின் அப்பிரமேயம் காணப்படுவதால், “ஒரு சிறிதும் அளவில் உறாதாகி” எனவும், அளவுக்கு அகப்படாததை அளத்தல் அவமாம் என அயலாதபடி பிரமேயமாவது தோன்ற, “தான் அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றி” எனவும், பின் அந்த அளவெல்லையும் கடந்து அப்பாலாய் அப்பிரமேயமாய் அமைவதை யுணர்ந்து, “தன்னளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே” எனவும் இயம்புகின்றார். பரம்பொருள் பிரமேயமாகவும், அப்பிரமேயமாகவும், இரண்டும் கடந்ததாகவும் தெரிவித்தவாறாம். பிரமாண, பிரமேய எல்லையைக் கடந்ததாயினும் இல்பொருளாகாது உட்பொருளாவது என உணர்த்தற்கு, “அப்பால் மன்னுகின்ற பொருளே” எனத் தெளிவிக்கின்றார். மண்ணக மக்கட்கேயன்றி விண்ணக தேவர்க்கும் அளந்து காண்பரியது என்பாராய், “வான் அளக்க முடியாதே” என வுரைக்கின்றார். வேதங்கள் அனந்தங் கோடி விண்ணுலகங்களைத் தனக்குள் கொண்ட பெருவானம் ஒன்று உளதாய், அதன்கண் உறையும் தேவர்களாலும் அளக்க முடியாது என வேதங்கள் விளம்புகின்றன என்பாராய், “வான் அனந்தங் கோடி வைத்த பெருவான் அளக்க வசமோ” என்றும், வேதங்கள் ஏங்கிப் போற்றுகின்றன என்பதைத் தெரிவித்தற்கு, “தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற” என்றும் இசைக்கின்றார். ஓதுவார்க்கு ஓதுந் தோறும் இன்பம் ஊற்றெடுத்துப் பெருகுதலால், “தேன் அளக்கும் மறை” என்று சிறப்பிக்கின்றார். (58)
|