4148.

     திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
          தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
     நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
          நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
     வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
          வான்நடுவே இன்பவடி வாய்இருந்த பொருளே
     பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
          பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

உரை:

     திசை தெரியாமல் மயங்கிய சிறியேனாகிய என்னைத் தெளிவித்து அழகிய மாடத்தின்கண் நல்ல ஆசனத்தில் இருத்தி ஆசையை ஒழித்த நல்ல தவமுடையவர்களும் மற்றவர்களும் சூழ இருந்து கேட்டு விரும்புமாறு அருளுருவாகிய சிவநிலையை எடுத்துரைக்குமாறு என்னைச் சிறப்பித்த பதிப்பொருளாகிய சிவனே! குற்றமில்லாத பெருவாழ்வு நல்கும் பெருமானே! மயக்கமில்லாத அறிவாகியவனே! வானுலகின் நடுவில் இன்ப வடிவாய் எழுந்தருளும் உயர்பொருளே! அன்பில்லாத மனத்தை உடையவர்களுக்கும் அதனை அறிவித்து அவர்கட்கும் அருள் செய்ய விளைகின்ற திருக்கூத்தை ஆடுகின்ற பெருமானே! என் சொல் மாலையையும் மகிழ்ந்து ஏற்றருளுக. எ.று.

     செய்வகை அறியாமல் மயக்கமுற்ற தமது சிறுமையை வெளிப்படுத்துவாராய், “திசை யறிய மாட்டாதே திகைத்த சிறியேன்” எனவும், தமக்குத் தெளிவு நல்கி மணி மாடத்தின்கண் உயர்நிலையில் இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்வித்துச் சிறப்பித்த நலம் விளங்க, “தெளிவித்து மணிமாடத் திருத்த விசிலேற்றி” எனவும் இயம்புகின்றார். மூவகை மண், பெண், பொன் என்ற ஆசைகளையும் நீக்கிச் சிவத்தை நோக்கித் தவம் புரியும் சான்றோர்களை, “நசை யறியா நற்றவர்” என்றும், உலகியல் வாழ்வில் உறையும் நன்மக்களை, “மற்றவர்” என்றும், இரு திறத்தாரும் சூழ இருந்து தமது சிவஞான உரையைக் கேட்டு மகிழ்ந்த குறிப்புப் புலப்பட, “சூழ்ந்து நயப்ப அருட் சுவை நிலையை நாட்ட வைத்த பதியே” என்றும் தெரிவிக்கின்றார். துன்பமில்லாத பேரின்பப் பெருவாழ்வைத் தருவது பற்றிச் சிவபெருமானை, “வசை யறியாப் பெருவாழ்வே” எனவும், அஞ்ஞான இருளுக்கு இடமின்றி ஒளிரும் சிவஞானத்தை அருளுவது தோன்ற, “மயல் அறியா அறிவே” எனவும், இன்ப வடிவாய் ஞானாகாசத்தில் எழுந்தருளும் சிவ பரம்பொருளின் நிலையை உணர்த்துதற்கு, “வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே” என்றும் கூறுகின்றார். பசை - அன்பு. அன்பில்லாத உள்ளத்தை உடையவர்க்கு அதனைக் காட்டி அதனைச் செய்யுமாறு ஊக்குகின்ற அருள் இயல்பு புலப்பட, “பசை யறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்தருளப் பரிந்த நடத்தரசே” என்று பகர்கின்றார். பாட்டு - பாட்டுக்களாலாகிய சொல் மாலை.

     (59)