4149.

     என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
          இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
     தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
          தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
     மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
          மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
     மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
          மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.

உரை:

     என் உயிர், உடல், பொருள் ஆகிய மூன்றையும் யானே மனமுவந்து கொடுக்க வாங்கிக்கொண்டு, அவற்றிற்கு எதிராக மன மகிழ்ந்து, தன்னுடைய உயிரும், உடலும், பொருளும் ஆகிய மூன்றையும் எனக்குத் தந்து என்னோடு கலந்து என்னைச் சிவமாக்கிய தனிப்பெருஞ் சுடரே! உலகில் நிலைபெற்ற உயிர்களுக்கு உயிராய் இன்பமாய் நிறைந்த மாணிக்க மணியே! எனக்குக் கண்ணாய், என் வாழ்வுக்கு முதலாய் என் நோய்க்கு மருந்தாய் ஒளிர்கின்ற அழகிய பொற் சபையில் நடம் புரிகின்ற அருளரசே! மெய்ம்மை உரைகளையே ஏற்று மகிழ்பவனாகிய நீ என்னுடைய பொய் நிறைந்த சொல் மாலையையும் ஏற்றணிந்து மகிழ்ந்தருளுக. எ.று.

     என் உயிர், உடல், பொருள் ஆகிய மூன்றையும் வாங்கிக்கொண்டு உன்னுடைய உயிர், உடல், பொருள் ஆகிய மூன்றையும் எனக்குத் தந்து என்னோடு கலந்து என்னைச் சிவமாக்கிக்கொண்டு, அருள் புரிந்தாய் எனத் தம்மைச் சிவமாக்கிச் சிறப்பித்த அருள் நிலையை இதனால் விளம்புகின்றார். தன்னைச் சிவமாக்கித் தன்னோடு கலந்து கொண்ட திறம் உரைத்த வடலூர் வள்ளல் ஏனைய உயிர்களிடத்தும் உயிராய், இன்பமுமாய் நிறைந்து நிலவுவதையும் எடுத்துரைப்பாராய், “மன்னுயிர்க்கு உயிராகி இன்பமுமாய் நிறைந்த மணியே” என்று போற்றி உரைக்கின்றார். பொன்னிற ஒளி கொண்டு பொழிந்த பொன்னம்பலத்தை, “மின்னிய பொன் மணிமன்று” என்று புகழ்கின்றார். மெய்யுரைகளை ஏற்று மகிழ்வதுபோல யான் கூறுவது பொய்யாயினும் அதனையும் ஏற்று அருளவேண்டுமென வேண்டுவாராய், “என்பொய்யும் அணிந்தருளே” என்று விண்ணப்பிக்கின்றார்.

     (60)