4150.

     மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
          வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
     பன்னுகின்ற தொழில்ஐந்துஞ் செய்திடவே பணித்துப்
          பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
     உன்னுகின்ற தோறும்எனக் குள்ளம்எலாம் இனித்தே
          ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பேர் ஒளியே
     மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
          மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.

உரை:

     நிலைபெற்ற பொன் வடிவத்தையும், மந்திர வடிவத்தையும், வான் வடிவத்தையும் எனக்குக் கொடுத்து, மணிமுடியணிந்து சொல்லப்படுகின்ற ஐந்தொழிலும் செய்திடப் பணிந்து, செம்மையாக என் அகத்தும் புறத்தும் விளங்குகின்ற பதிப்பொருளே! எண்ணுந் தோறும் என் உள்ளமெல்லாம் இனிக்கும்படி சுரக்கின்ற, தெளிந்த அமுதே! ஒப்பற்ற தனிப்பெரும் ஒளியாகியவனே! ஒளிர்கின்ற அழகிய அம்பலத்தில் நடம் புரிகின்ற அருளரசே! மெய்யன்பர்களில் மெய்ம்மையைக் கொண்டருளும் நீ, யான் பொய்யாகத் தொடுக்கும் சொல் மாலையையும் அணிந்தருளுக. எ.று.

     Êசிவன் திருமேனி நிலையான பொன்னிறமுடையதாகலின் அதனை, “மன்னுகின்ற பொன் வடிவு” எனவும், மந்திர மூர்த்தியாதல் பற்றி, “மந்திரமாம் வடிவம்” எனவும், ஞானாகாச வடிவும் சிவனுக்குரியதாகலின் இம்மூன்றையும் தமக்குச் சிவமாந் தன்மை எய்தினமை புலப்பட, “பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து” எனவும் கூறுகின்றார். தொழில் ஐந்து என்றது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்துமாம். சிவமாந் தன்மை எய்திய ஆன்மாவுக்கு அதற்குரிய தொழிலைந்தும் உரியவாம் என்பது பற்றி, “தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து” என்றும், பொருள்தோறும் அதன் அகமும் புறமும் கலந்து நிற்கும் கலப்புண்மை விளக்குதற்கு, “அகம் புறமும் விளங்குகின்ற பதியே” என்றும் உரைக்கின்றார். சிந்திப்பார் சிந்திக்கும்தோறும் அவர் சிந்தையுள் தேனூறுவதாகப் பெரியோர்கள் உரைத்தலால், “உன்னுகின்றதோறும் எனக்கு உள்ளமெலாம் இனித்தே ஊறுகின்ற தெள்ளமுதே” என்று அனுபவித்து உரைக்கின்றார். பேரொளி மயமாதலின் சிவனை, “ஒரு தனிப் பேரொளியே” என்று சொல்லுகின்றார். இயல்பாகவே ஒளியுடையதாதல் பற்றி, “மின்னுகின்ற மணி” என்று விளக்குகின்றார். மெய்யர்களின் மெய்யை ஏற்றுக்கொள்வதுபோல யான் பொய்யே புனைந்து பாடும் சொல் மாலையை அணிந்தருளுக என்பாராய், “மெய்யும் அணிந்தருள்வோய் என் பொய்யும் அணிந்தருளே” என்று போற்றுகின்றார்.

     (61)