4151.

     நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
          நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
     புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
          பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
     தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
          தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
     இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
          இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

உரை:

     நல்லோரைக் காணினும் தீயரெனக் கருதிக் குரைத்து ஓடியலையும் நாய் இனத்தினும் கீழ்ப்பட்ட அடியேனாகிய யான் செய்கின்ற சிறுமைகள் எல்லாவற்றையும் பெருமையுடையது என்று பொறுத்தருளிப் புலைத்தன்மை யுடையவனாகிய என்னுடைய பொய்யுரைகளை மெய்யென விரும்பி மேற்கொண்டு உவந்து உயர்ந்த தன்மைகள் எல்லாவற்றையும் தன்பால் உடைய பெரிய இருக்கையில் என்னை அமர்வித்து, முடிசூட்டித் தொழில் ஐந்தையும் செய்கின்ற சதுரப்பாட்டையும் எனக்குத் தந்த பதிப் பொருளாகிய சிவனே! வறுமையால் உளவாகும் துன்பங்களின் நீங்கி, இன்பமடையுமாறு அம்பலத்தில் விளங்குகின்ற திருநடனத்தை யுடைய அருளரசே! என்னுடைய சொல் மாலையையும் ஏற்று அணிந்தருளுக. எ.று.

     நன்மை தீமைகள் ஆகிய பண்புப் பெயர்கள் ஆகுபெயரால் முறையே நல்லவரையும் தீயவரையும் குறித்து நிற்கின்றன. நாய் இனத்தின் மிகக் கீழான நாய் போன்றவன் எனத் தமது சிறுமையைக் குறித்தற்கு, “நாய் குலத்தில் கடையான நாயடியேன்” என்று வடலூரடிகள் தம்மை உரைக்கின்றார். புன்மை - சிறுமை; ஈண்டு அது சிறுமை விளைவிக்கும் செயல்கள் மேல் நின்றது. பெருமைக்குரிய சிறப்பெல்லாம் ஒருங்கு பெற்ற ஆசனம் எனச் சிறப்பித்தற்கு, “தன்மை எலாமுடைய பெருந் தவிசு” என்று மொழிகின்றார். சதுர் - சதுரப்பாடு; வித்தகம் எனினும் அமையும். இன்மை - வறுமை; நல்லுறவுமாம். இன்மையால் விளைவது துன்பமாதலின் அது அடியாரது அடிமைப் பணிக்கு இடையூறாதலின், அதனைப் போக்கி இன்பமுறச் செய்தல் இறைவனது அம்பலத் தாடலின் நோக்கமாதல் வெளிப்பட, “இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுறப் பொதுவில் இலங்கு நடத்தரசே”என்று புகழ்கின்றார். இசை - சொல் மாலை.

     (62)