4152.

     விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
          மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
     முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
          மொழிந்தருளி எனைஆண்ட முதற்றனிப்பேர் ஒளியே
     எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
          எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
     மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
          மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

உரை:

     உயர் குலத்தவரால் அருவருத்து ஒதுக்கப்படும் புழு இனங்கள் எல்லாவற்றிலும் கடைப்பட்டவனாகிய யான், மெய்ம்மை மொழியாது பொய்யே உரைக்கின்ற என் பொய்ம்மொழியை நயந்து மகிழ்ந்து, நலமே உருக்கொண்ட பெரியோர்க்குரிய திருவடியை எனக்கணிந்து, படைத்தல் முதலிய தொழில் ஐந்தையும் செய்க எனப் பணிந்தருளி, என்னை ஆண்டுகொண்ட முதற்பொருளாகிய ஒப்பற்ற பேரொளிப் பெம்மானே! எழுவினால் ஆக்கப்பட்ட மனத்தையுடைய உழக்கை போன்றவர்க்கு அறிதற்கரிய நிலையை யுடையவனே! நான் நெருங்கி அடைதற்குரிய பொன்மலை போன்றவனே! மழுப்படை ஏந்தும் சிவனடியார்கள் நின்று போற்ற அழகிய அம்பலத்தில் நடம் புரிகின்ற பெரிய கூத்தினையுடைய அருளரசே! என்னுடைய சொல் மாலையை அணிந்தருளுவாயாக. எ.று.

     விழுக் குலத்தோர் - உயர் குலத்தவர். புழுக்குலம் - பலவகையான புழுவினம். முழுக் குலத்தோர், உயர்ந்த பண்பும் செயலும் உடைய அருட் செல்வர். பரம்பொருளாய் ஒப்பற்ற ஒளி மயமாய் விளங்குதலால் சிவனை, “முதற் றனிப் பேரொளியே” என்று மொழிகின்றார் வலிய திண்மை பொருந்திய தூண் போன்ற மனம் என்பது விளங்க “எழுக்குலத்தில் புரிந்த மனம்” என இசைக்கின்றார். எழு - தூண்; வன்மை மிக்க இரும்புமாம். இதனை எஃகு என்பதுமுண்டு. கழு - தூண். கழுக் குலத்தார் - மரம் போல்பவன். கழு - கழுமரம். மழுக் குலத்தார் - மழுப் படையை அடையாளமாகக் கொண்டு சிவத்தொண்டு புரியும் மெய்யன்பர்கள். மழுப்படை - சிவனுக்குரிய படைகளில் ஒன்று.

     (63)