4153.

     கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
          கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
     மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
          மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
     புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
          பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
     விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
          விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.

உரை:

     கலை ஒழுங்கைப் பார்த்தறியாத புலைத்தன்மை பொருந்திய குடியினும் கடைப்பட்டவனும் வஞ்சகனுமாகிய என்னுடைய, பொய்த் தவத்தையும் திருவுள்ளத்தில் மகிழ்ந்தருளி மலைபோல் உயர்ந்த பெரிய இருக்கையில் அமர்த்தி மணிமுடி சூட்டி, “மகனே நீ வாழ்க” என்று வாழ்த்தி யருளிய என்னுடைய அருட் குருவே! புலைச் செயலால் கொடியராகியோர் சிறுதும் விளங்கக் கண்டறியாத பொன் மேனியையுடைய பெருமானே! நான் உண்ணுகின்ற புதிய அமுதத் திரளாகியவனே! விலை குறிக்கமாட்டாத பெரிய மணி போல்பவனே! வெறுத்தொதுக்கக் கூடாத மருந்து போல்பவனே! விளங்குகின்ற திருநடனத்தையுடைய அருளரசே! யான் விளம்புகின்ற சொல் மாலையை அணிந்தருளுக. எ.று.

     கலைக்கொடி - கலைகளில் ஒழுங்கு; கல்வியுமாம். புலைக் குடி - புலைச் செயலுடையவர்களின் குடும்பம். கைதவன் - வஞ்சகன். பொய் தவம் - பொய்யான தவம். மலைபோல் உயர்ந்த தவிசினை, “மலைக் குயர் தவிசு” என்று கூறுகின்றார். மாத் தவிசு - உயர்ந்த ஆசனம். புலைக் கொடியார் - புலைத் தொழில் புரியும் கீழ்மக்கள். அவர்களுடைய கருத்து அத்தொழிலிலேயே ஈடுபட்டிருப்பதால் அவர்களால் பரம்பொருளைக் காண்டல் கூடாமை பற்றி, “புலைக் கொடியார் ஒரு சிறிதும் புலப்படக் கண்டறியாப் பொன்னே” எனவும், அனுபவிக்குந்தோறும் புத்தின்பம் தருவதால் சிவபெருமானை, “புத்தமுதத் திரளே” எனவும் புகழ்ந்தோதுகின்றார். விலையிட்டறியாத மாணிக்க மணி போன்ற நிறம் பொருந்தி விளங்குவதால் சிவனை, “விலைக்கறியா மாமணியே” என்று வியந்துரைக்கின்றார். நோய் பொருட்டுத் தரும் மருந்து வெறுப்பை விளைவிக்கும் இயல்பினவாதலால் அவற்றில் வேறுபடுத்தற்கு, “வெறுப்பறியா மருந்தே” என்று மொழிகின்றார். விளம்பும் சொற்களாலாகிய பாமாலையை, “விளம்பு” எனக் கூறுகின்றார்.

     (64)