4154. மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
உரை: மதங்கள் என்றும், சமயங்கள் என்றும், சாத்திரங்கள் என்றும், அவற்றுள் சொல்லப்படுகின்ற தேவர்கள் என்றும், அத் தேவர்கள் வாழும் பதங்கள் என்றும், அப் பதங்களை அடைந்த மெய்யன்பர்களால் அனுபவிக்கப்படுகின்ற அனுபவங்கள் என்றும், பல்வேறு வகையாய்ச் சமய நூல்களில் விரித்துரைக்கப்படுகின்ற பொருள் வகைகளில் ஒன்றனையும் தெரியாமல் மயங்குகின்ற எனக்கு, அவற்றை வெட்ட வெளியாகத் தெரிவித்தருளிய இறைவனே! நித்தத்தன்மை பொருந்திய சுத்தசிவ சன்மார்க்கமாகிய அம்பலத்தில் ஒப்பற்ற திருக்கூத்தாடுகின்ற அருளரசே! யான் சாற்றுகின்ற சொல் மாலையையும் மகிழ்ந்தேற்றி அணிந்தருளுக. எ.று.
மதம் - கொள்கை. பல கொள்கைகளையுடையது சமயம். அக் கொள்கைகளை எடுத்தோதுவது சாத்திரம். சமயக் கொள்கைகளை மேற்கொண்டு, வாழ்ந்து உயர்ந்தவர்கள் தேவர்கள். அத்தேவர்கள் வாழ்கின்ற நிலைகள் பதம் எனப்படும். சமய ஒழுக்கத்தை அன்புடன் மேற்கொண்டொழுகிய அன்பர்கள் முடிவில் அப்பதங்களை அடைந்து ஆங்கு அனுபவித்த அனுபவங்கள் மிகப் பலவாகக் கூறப்படுவதால் அவை விரிந்த திறத்தை, “பற்பலவா விரிந்த விதம்” எனவும், அவற்றை யறிந்துகொள்ள மாட்டாது மயங்கினேன் என்பாராய், “பற்பலவா விரிந்த விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே” எனவும், சிவபிரான் குருமுதல்வனாய்த் தோன்றி அவற்றைத் தெளிவாகத் தெரிவித்த சிறப்பை உணர்த்துதற்கு, “வெட்ட வெளியா அறிவித்திட்ட அருள் இறையே” எனவும் எடுத்துரைக்கின்றார். சதம் - நித்தத்துவம். சிவமாகிய சத்துப்பொருளை அடைதற்குரிய தூய சிவநெறியை, “சுத்த சிவ சன்மார்க்கம்” என்று சொல்லுகின்றார். சாற்றுதல் - சொல்லுதல், அதனால் சொல் மாலையைச் சாற்று என்று குறித்தருளுகின்றார். (65)
|