4155. என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
ஆவாஎன் றெனைஆண்ட தேவாமெய்ச் சிவமே
பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
உரை: என் உள்ளத்தில் எழுகின்ற ஆசைகள் எல்லாம் தன்னுடைய அருளுருவில் பொருந்துமாறு செய்தருளி, என்னையும் தன்னுடன் இருப்பித்துத் தன்னுடைய ஆசையனைத்தும் என் உள்ளத்தில் நிறைத்துத், தானும் என்னுடன் இருந்து எண்ணிக் கலந்துறையும் பெருந் தகைமையையுடைய பெருமானே! எனக்கு அன்னையே, அப்பனே, என்னுடைய அருமையான உயிர் போல்பவனே! அமிர்தமாய் எனக்கு இன்பம் தருபவனே! இங்கே வா என்று என்னைக் கூவி யழைத்து ஆட்கொண்டருளிய தேவனே! மெய்ம்மையான சிவபரம்பொருளே! பொன்னாலான அம்பலத்தில் நடம் புரிகின்ற அருளரசே! புண்ணிய மூர்த்தியே! என்னுடைய சொல் மாலையாகிய பூங்கண்ணியையும் மனமுவந்து ஏற்றருளுக. எ.று.
சிவத் திருமேனிகளில் தமது ஆசையெல்லாம் ஒன்றியிருப்பதை உணர்த்துதற்கு வடலூர் வள்ளல், “என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவந் தனக்கே எய்திடச் செய்திட்டருளி” என்று இசைக்கின்றார். தமது திருவுள்ளத்தில் உளவாகின்ற அருள் வகை எல்லாவற்றையும் என்னுள் வைத்து என் கரணத்தைச் சிவகரணமாக்கி உடனிருந்து உள்ளே கலந்தருளிய பெருநலத்தைக் கண்டு வியந்து, “எனையும் உடன் இருத்தித் தன் ஆசையெல்லாம் என் உள்ளகத்தே வைத்துத் தானும் உடன் இருந்தருளிக் கலந்த பெருந்தகையே” என விரித்துரைக்கின்றார். அன்னை என்பது அன்னா என்று விளியேற்றது. தம்மைக் கூவி அழைத்து ஆண்டுகொண்டமை பற்றி, “ஆவா என்றெனை ஆண்ட தேவா” என்று உரைக்கின்றார். பொற் சபையைப் “பொன்னாரும் பொது” என்று புகழ்கின்றார். பூங்கண்ணி - தலையில் அணியும் பூமாலை. சொல் மாலையும் பூமாலை போல்வது பற்றி, “மொழிப் பூங்கண்ணி” எனக் கூறுகின்றார். அன்னா, அப்பா, ஆருயிரே, அமுதே, தேவா, சிவமே, அரசே, புண்ணியனே, என்பன சிவத்தின்பால் கொண்ட ஆர்வம் புலப்பட நின்றன. (66)
|