4156. தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
என்அரசே என் உயிரே என்இருகண் மணியே
இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
உரை: என்னுடைய அருளரசே! எனக்கு உயிராகியவனே! என்னுடைய இரண்டு கண்மணியானவனே! தனித்தனியாக இயலுகின்ற தத்துவங்கள் எல்லாவற்றையும் தனித்தனிமை குன்றாமல் என் வசம் நிற்பித்து எனக்குத் தாழ்ந்து என்னுடைய ஏவல்களைச் செய்யுமாறு அமைத்தும், மேலுலகில் உள்ள தேவர் அரசர்களும், கீழுள்ள பாதள அரசர்களும், நடுவே மண்ணுலகிலுள்ள என் முன்னின்று போற்ற, கருதப்படுகின்ற அண்ட பிண்டங்கள் எல்லாவற்றிலும் எவ்விடத்திலும் உள்ள உயிர்கள் என் அரசே என்று தனித்தனியே புகழ்ந்து போற்றும்படி, எனக்கு அரச முடியணிந்து என்னையும் இன்ப வடிவினவாக்கி, எக்காலத்தும் அது நின்று விளங்கச் செய்த சிவ பரம்பொருளே! இரண்டாகிய உன் பொற் பாதங்களில் யான் பாடுகின்ற சொல் மாலையை ஏற்று மகிழ்ந்தருளுவாயாக. எ.று.
ஆன்ம தத்துவம் முதலிய முப்பத்தாறும் தனித்தனியே வேறு வேறு நெறியில் இயங்குவதால் அவற்றை, “தன் அரசே செலுத்தி நின்ற தத்துவங்கள்” எனவும், அவை தம்மையுடைய ஆன்மாவின் வழி நில்லாமல் அவ்வான்மாவின் உண்ணின்று ஒளிரும் உயிராகிய என் ஆணை வழி நிற்கப் பண்ணினமை விளங்க, “தனித்தனி என் வசமாகித் தாழ்ந்து ஏவல் இயற்ற” எனவும் இயம்புகின்றார். முவ்வுலகங்களிலும் உள்ள அரசர்களும், இவ்வுலகங்களுக்கு அகத்தும் புறத்தும் உள்ள அண்ட பிண்டங்கள் எல்லாவற்றிலும் வாழும் ஆன்மாக்கள் யாவும் தனித்தனியே எதிர் நின்று “என் அரசே” என்று போற்ற, உயர்நிலைக் கண் தன்னை இன்ப வடிவமே கொண்டிருந்து விளங்க வைத்தான் சிவபெருமான் என்பாராய், “இன்ப வடிவாக்கி என்றும் இலங்க வைத்த சிவமே” என்று எடுத்தோதுகின்றார். இசை - சொல் மாலை. (67)
|