4157. பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
விரவியமா மறைகள்எலாம் தனித்தனிசென் றளந்தும்
மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
ஓங்கியஅவ் வெளிகளைத்தன் உள்அடக்கும் வெளியாய்க்
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
உரை: வியோமப் பாழ், மாயப் பாழ், உபசாந்தப் பாழ் என்ற முப்பாழ் முதலாகவுள்ள ஏழு வகைப் பாழ்களுக்கப்பால் எண்ணிறந்த இருக்குகள் நிறைந்த வேதங்கள் பலவும் தனித்தனியே முயன்று சென்று கண்டும் உண்மையளவைக் காணாமல் மெலிவுற்று வருந்திப் போற்றிச் செய்ய, அவ்வாறு தேறிய பாழ்வெளிகளுக்குள் உள்வெளியாய் உயர்ந்த உள்வெளியாய்ச் சிறந்த அவ்வெளிகள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு ஓங்கும் சுத்த சிவவெளியாய்த் துலங்குகின்ற பரசிவமே! அருள் கனிந்தொழுகும் திருக்கூத்தாடுகின்ற அருள் முதல்வனே! என்னுடைய கருத்தின்கண் நிறைந்த சொல் மாலையையும் ஏற்று அணிந்தருளுக. எ.று.
மாயா மண்டலாதீதப் பெருவெளியைப் பரவெளி என்றும், மாயா மண்டலத்தின் வெளியை நடுவெளி என்றும், ஞானவெளியை உபசாந்த வெளி என்றும் வடலூரார் குறிக்கின்றார். இவ்வெளிகளில் சிவவொளியின் வேறாக ஒன்றும் இல்லாமையால் இவற்றைப் பாழ் எனச் சான்றோர் குறிப்பர். முப்பாழின் மேலும் நால்வகைப் பாழ்களைக் கூறுப என்பது பற்றி நான்கையும் கூறும் ஏழ்வகைப் பாழ்களையும், “ஏழ் வெளி” என இயம்புகின்றார். இருக்குகள் பலவற்றையும் தன்கண் கொண்டு மந்திரமும் பிராமணமுமாக வகைப்பட்டு இயலுவதால் வேதங்களை, “விரவிய மாமறைகள்” என விளம்புகின்றார். “வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” என்று சான்றோர் உரைப்பதால், “மறைகள் எலாம் தனித்தனி சென்றளந்தும் மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற” என்று இயம்புகின்றார். பரவெளி முதலாக வுள்ள வெளிகளுக்கு உள்வெளியாயும், அவை எல்லாவற்றையும் தன்னுள் அடங்க நிற்கும் பெருவெளியாயும், இவை எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தி ஓர் எல்லையின்றி உயர்ந்தோங்குவதாய் நிலவுவது சுத்த சிவவெளி என்பாராய், “கரையற நின்றோங்குகின்ற சுத்த சிவவெளியே” என்று யாப்புறக் காட்டுகின்றார்
(68)
|