4158. வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
ஐயமுறேல் ஒன்றெனையாண் டமுதளித்த பதியே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
உரை: கோடை வெய்யிலிலே நடந்ததனால் உண்டாகிய இளைப்பு தோன்றியபொழுது அக்கணத்திலேயே, மிக்க நிழலும் குளிர்ந்த அமுதும் தந்து அளித்தார் போலும் திருவருள் விளைவாகியவனே! காம மயக்கம் சிறிது உண்டாகியபொழுது இளமங்கையர்கள் தானே வலிய வந்து கூடும்படி உதவிய மாண்புடைய நண்பனைப் போன்றவனே! செயலறுதியால் மனம் வருந்தியபோது அந்நிலையில் தோன்றி அச்செயல் அறுதிக்கு ஏதுவாகிய கவலையைப் போக்கியருளி என்னையும் காத்து ஆதரிக்கும் தலைவனே! ஐயம் பட வேண்டா என்று என்னை ஆட்கொண்டு அமுதளித்து ஆதரவு செய்த பதிப் பொருளே! அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருளரசே! எனது சொல் மாலையை ஏற்றுத் தோளில் அணிந்து மகிழ்ந்தருளுக. எ.று.
வெய்யில் - வெய்யல் என வந்தது. கடும் வெய்யிலில் நடந்து இளைப்பவர்க்கு அக்கணத்தே நிழலும் உணவும் இன்பம் தருவதுபோல இறைவனது திருவருள் நலம் விளங்குதலால், “மிகு நிழலும் தண்ணமுதம் தந்த அருள் விளைவே” என்று புகழ்கின்றார். காம வெப்பத்தால் மனம் கலங்கியோர்க்கு மகளிர் உறவால் கலக்கம் நீக்கித் தெளிவு தருவிக்கும் சிறப்புடைய நண்பர்களைப்போல அருள் புரிவது பற்றிச் சிவத்தின் திருவருளை, “மாண்புடைய நட்பே” என்று உரைத்து நயப்பிக்கின்றார். மிக்க இடும்பையால் செய்வகை யறியாமல் திகைக்கின்ற போது அத்திகைப்பு நீக்கி மேலும் அது எய்தாவண்ணம் பாதுகாத்து இன்புறுத்தும் தலைமக்கள் போலத் தமக்கு இறைவன் செய்யும் திருவருள் உதவியை வியந்து, “கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே” என்றும், சந்தேக விபரீதங்களால் மனம் சரிக்கின்றபொழுது சரிப்பு நீங்கியவிடத்து உளதாகும் மனவமைதியைத் திருவருள் நலமாகக் கருதுகின்றாராதலின், “ஐயமுறேல் என்றெனை யாண்டு அமுதளித்த பதியே” என்றும் சொல்லி மகிழ்கின்றார். (69)
|