4159. கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
உரை: கொலைத் தொழிலைப் புரிகின்றவர்கள் ஒழிய மற்றவர்கள் எல்லோரும் நின்னுடைய இனத்தைச் சேர்ந்தவர்களாக நீ என்னுடைய இனத்தின் தலைமகனாவன்; சுத்த சிவ சமரச சன்மார்க்க நெறி தடையின்றி வளர்ந்தோங்க அது வளர்ந்து நிலை பெறுக என வாழ்த்தியருளிய குருபரனே! உயர்நிலையைப் பெறுவதற்கு விரும்பி முயல்பவர்களைக் காத்து ஆதரிக்கும் நித்திய முதல்வனே! எல்லாப் பதங்களும் விளக்கமுறத் திருவருள் ஒளியில் நிலைநிறுத்திய சிற்குணச் சிவனே! புலைத் தன்மையில்லாத பெரிய தவ முதல்வர்கள் நின்று போற்ற அழகிய அம்பலத்தில் தூய நடம் புரியும் அருளரசே! என்னுடைய சொல் மாலையையும் அணிந்தருளுக. எ.று.
கொலை புரிவார் - கொலைத் தொழிலைச் செய்பவர். குலம் - இனம். மலைவு - தடை. சமரச சன்மார்க்கம் வளர்ந்தோங்குதற்குக் குருபரனுடைய வாழ்த்து வேண்டப்படுதலின், “சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர்ந்திருக்க என வாழ்த்திய குருவே” என்று ஏத்துகின்றார். நிலை விழைவார் - உயர்ந்த பதங்களை விரும்புபவர். பதங்கள் நிலைபெற்றாலன்றி அவற்றை விழைவார்க்கு அருளுதல் கூடாமையால், “எல்லா நிலையும் விளங்குகிற அருளில் நிறுத்திய சிற்குணனே” என்று புகழ்கின்றார். புலைத்தொழிலைக் கனவிலும் நினையாதவர்களை, புலையறியாப் பெருந்தவர்கள்” எனவும், புலால் உண்ணாமை தவச் செயலாதலால் அதனை நினையாதவர்களை, “பெருந்தவர்” எனவும் சிறப்பிக்கின்றார். புகலுதல் - சொல்லுதல். ஆகவே சொல் மாலை “புகல்” எனப்படுகிறது. (70)
|