4160. உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றை பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
உரை: உயிர்களைக் கொல்லுதலும் புலால் உண்டலும் உடையவர் எல்லோரும் நமக்கு உறவினராகார்; அவர் புற இனத்தார் ஆவர்; அவர்களுக்குப் பிறரை வேண்டி நிற்கும் பசித் துன்பத்தைப் போக்குவது மாத்திரமே செய்க; அவர்கள்பால் பணிந்து நற்பண்புடைய சொற்களைச் சொல்லவேண்டா; நண்பராய் வேறு யாரும் உதவ வேண்டா; இங்கே விரும்பப்படுகின்ற சன்மார்க்க நெறியை அவர்கள் எய்துங்காறும் இதனைச் செய்க; இதுதான் நமது அருளாமை என்று எனக்கு உரைத்தருளிய இறைவனே! மயக்கமில்லாத மெய்மைத் தவத்தையுடைய பெரியோர்கள் நின்று துதிக்க அம்பலத்தில் ஆடுகின்ற அருட்கூத்தையுடைய அருளரசே! என் சொல்மாலையை அணிந்து மகிழ்ந்தருள்க. எ.று.
உயிர்க்கொலை - உயிர்களைக் கொல்லுதல். புலைப்பொசிப்பு - புலால் உண்ணுதல். உறவினத்தார் அல்லர் - உறவினர் ஆகார். நண்பராயினும் பிறரே யாவர். பயிர்ப்புறும் பசி - பசியால் உணவு வேண்டிப் பிறரை இரக்கச் செய்யும் பசி. பயிர்ப்பு - அழைத்தல். பண்புரைத்தல் - இனிய சொற்களைக் கூறுக. நண்புதவல் - நண்பராய்ப் பொருள் இடம் முதலியன கொடுத்தல். நயப்புறு சன்மார்க்கம் - எல்லாராலும் விரும்பப் படுகின்ற சன்மார்க்கம். பிற இனத்தவராகிய அவர்கட்குப் பசி தீர்ப்பது ஒன்றே செய்தல் வேண்டும்; அதற்கு மேல் அவர்கள் நல்லுணர்வு கொண்டு சன்மார்க்க நெறியை மேற்கொள்ளும்வரையில் அவர்களோடு இனிமை மொழிகளையோ, பொருள் இடம் முதலிய பிறவற்றைக் கொடுத்தோ உதவுதல் கூடாது என்று சொல்லுகின்ற வடலூர் அடிகள் இஃது இறைவன் அருளாணை என்பாராய், “இதுதான் நம்மாணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே” என மொழிகின்றார். மயர்ப்பு - மயக்கம். (71)
|