4161. வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
உரை: வன்கண்மையுடையவர்கள் உயிர்க் கொலை புரிந்து அதன் புலாலை உண்பர்; அவர்கள் ஒருசிறிதும் நம் இனத்தவராகார்; ஆயினும் வேறுபட்ட அவரிடத்து, என் அன்புடைய மகனே! அவருடைய பசியை நீக்குதல் ஒன்றையே செய்க; அதன் மேல் அவர்பால் அருள் கொண்டு ஒன்றும் செய்ய நினையாதே என்று எனக்கு இன்பம் உண்டாக எடுத்துரைத்த என் குருபரனே! என்னைப் பெற்ற ஒப்பற்ற தந்தையே! தாயே! எனக்கு இறைவனே! துன்பமில்லாத மெய்த்தவத்தையுடைய பெரியோர்கள் சூழ்ந்து நின்று போற்றுகின்ற அம்பலத்தில் தூய நடம் புரிகின்ற அருளரசே! என் சொல் மாலையை மகிழ்ந்து அருள்வாயாக. எ.று.
வன்புடையார் - வன்கண்மையுடையவர்கள்; இரக்கமில்லாதவர்கள் எனினும் பொருந்தும். புலால் உண்பவர் உயிர்களைக் கொன்று அவற்றின் உடலூனைத் தின்பவராதலின், “கொலை கண்டு புலை உண்பார்” என்று புகல்கின்றார். புலால் உண்பது சன்மார்க்கத்தில் விலக்கப்பட்டதாகலின் புலால் உண்பார் சிறிதும் மரபினரன்று என்று கூறுகின்றார். மரபினர் - சன்மார்க்கத்தை மேற்கொண்டு ஒழுகுபவர். பசி தீர்க்கும் நல்லறத்தைப் புலால் உண்பவராயினும் அவர்கட்குச் செய்தல் வேண்டும் என்பாராய், “அவர் அளவில் அன்புடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக” என்றும், அதற்கு மேல் அவர்கட்கு உதவுதல் வேண்டா என்று விளக்குவாராய், “அருட் செயல் ஒன்றும் செயத்துணியேல்” என்றும் இயம்புகின்றார். செவிக்கு இன்பமுண்டாக இனிய சொற்களால் உபதேசித்தமை விளங்க, “இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே” என்று கூறுகின்றார். மெய்த்தவர்கள் உயிர்க் கொலை, புலால் உண்டல் முதலியவற்றால் விளையும் துன்பங்கள் தம்மை வந்து தாக்காமைப் பொருட்டு மெய்ம்மைத் தவம் செய்கின்றார்கள் என விளக்குதற்கு, “துன்பறு மெய்த்தவர்” என்று சொல்லுகின்றார். தூய சிவபோகம் ஒன்றே விளையும் திருநடனமாதலின் சிவனது அம்பலக் கூத்தை, “தூய நடம்” என மொழிகின்றார். சொல் - சொல் மாலை. (72)
|