4162. கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
உரை: கொலைத் தொழிலைச் செய்து புலால் உண்பவர்கள் கொடியவர்களாயினும் குறித்த ஓர் ஆபத்தில் சிக்கி வருந்தும்பொழுது உலகில் அவ்வருத்தத்தைப் பார்த்து மகிழ வேண்டா; அவர்களுக்கு உண்டாகிய வருத்தத்தையும் துன்பத்தையும் தக்கது உதவி போக்குதல் வேண்டுமென்று அன்புடன் உபதேசித்தருளிய குருபரனே! திருமாலும், நான்கு முகங்களையுடைய பிரமனும், நித்தியர்களாகிய தேவர்களும் பிறருமாகிய நின்மலர் எனப்படுகின்ற யாவரும் காணும்படியாக அடியும் முடியும் எளியனாகிய எனக்குக் காட்டி அருளிய பரம்பொருளே! அம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே! என் சொல் மாலை யேற்று அணிந்து மகிழ்ந்தருள்க. எ.று.
உயிர்களைக் கொன்று அவற்றின் புலாலை உண்பவர்கள் கொடியவரே என்றாலும் அவர்கட்குத் துன்பம் வந்தவிடத்து அவர்கள் வருந்துவதைப் பார்த்து மகிழ்வது நற்செயலாகாது என அறிவுறுத்துவாராய், “கொலை புரிந்து புலை நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்றபோது படியில் அதைப் பார்த்து உகவேல்” எனவும், அவர்களுக்கு வருத்தமோ, துன்பமோ, அச்சமோ தோன்றி அலைக்கின்றபோது வேண்டுவன உதவி அவர்கள் துன்பத்தைப் போக்குக என்பாராய், “அவர் வருத்தம் துன்பம் பயந் தீர்த்து விடுக” எனவும், இவ்வாறு தமக்கு ஞானாசிரியன் உரைத்தருளினான் எனக் கூறுவாராய், “எனப் பரிந்துரைத்த குருவே” எனவும் உரைக்கின்றார். பயம் தீர்த்து விடுக என்றதில் விடுக என்றது, அவருடைய தொடர்பைக் கைவிடுக எனக் குறிக்கின்றதாம். திருமால் முதலியோர் நித்தியர்களாதலின் அவரோடு ஒத்த தேவர்களை, “நித்தியரே” என மொழிகின்றார். என்கின்றோர் - எனப்படுபவர். திருமால் அடியும், நான்முகன் முடியும் காண முயன்று மாட்டாதொழிந்தாராக, எளியனாகிய எனக்குக் காட்டியருளினாய் என்பது புலப்பட, “அடியும் உயர்முடியும் எனக்களித்த பெரும் பொருளே” என்று கூறுகின்றார். பெரும் பொருள் - பரம்பொருள்; பிரமப் பொருள் எனினும் அமையும். (73)
|