4163. தயைஉடையார் எல்லாரும் சமரசன் மார்க்கம்
சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
உரை: அருள் உள்ளம் உடையவர் அனைவரும் சமரச சன்மார்க்கத்தைச் சார்ந்தவர்களாதலால் அவர்களோடு சேர்ந்து விருப்பம் மிகத் தூய அருள் நெறியில் நின்று மகிழ்ந்து விளையாடி வருக என்று எனக்கு உபதேசித்தருளிய நட்புள்ளம் கொண்ட சற்குருவாகிய சிவனே! உய்தி பெற முயலும் என் உயிர்க்கு இனிய உறவாகியவனே! என்னுடைய அறிவின்கண் ஓங்கிய பேரன்புருவாகிய பெருமானே! என் அன்பின்கண் உற்றொளிரும் ஒளி மயமாகிய பரசிவமே! மயக்கத்தைப் போக்கிய மெய்மைத் தவஞானிகள் சூழ்ந்திருந்து துதிக்கின்ற அம்பலத்தின்கண் அழகிய நடம் புரிகின்ற அருளரசே! எனது இச் சொல்மாலையை அணிந்து அருள்வாயாக. எ.று.
தயை - அருள். தமது உள்ளத்திலும் சொல்லிலும் செயலிலும் அருட் பண்பு திகழ ஒழுகுபவரை, “தயை யுடையார்” என்று குறிக்கின்றார். அவர்கள் வேறு வேறு நெறியினராயினும் சமரச சன்மார்க்கத்தைச் சார்ந்தவராவர் என்பாராய், “தயை யுடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே” என்று வடலூர் வள்ளல் யாவரும் தெளிய உரைக்கின்றார். அவர்களது கூட்டுறவு அருள் நெறியை வளர்ப்பதாகலின், “அவர்கள் தம்மோடும் கூடி நல்லருள் நெறியில் களித்து விளையாடி “நண்ணுக” என்று கூறுகின்றார். இக்கூற்று ஆசிரியருடைய அருளுரை என்றற்கு, “எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே” என்று நவில்கின்றார். சன்மார்க்க நெறியில் நின்று உய்தி நாடுவது தோன்ற, “உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே” என உரைக்கின்றார். ஈசன்பால் கொள்கின்ற அன்பை ஞானம் என உயர்ந்தோர் கூறுதலால் அன்புக்கு அறிவை இடமாக வைத்து, “அறிவில் ஓங்கிய பேரன்பே” எனவும், அன்பே சிவம் என்பதுபற்றி ஞான ஒளிமயமாகிய சிவ பரம்பொருளை, “அன்பிலுறும் ஒளியே” எனவும் எடுத்துரைக்கின்றார்.
அருளுக்கு மறுதலையான மருள் கெடும் பொருட்டுத் தவம் செய்து உயர்ந்தவர் என்பாராய்ச் சான்றோர்களை, “மயலறு மெய்த்தவர்” எனச் சிறப்பித்து மகிழுகின்றார். மாலை எனப் பொதுப்படக் கூறினாராயினும் சிறப்பாக அது சொல் மாலைக்கு ஆயிற்று. (74)
|