4164. அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
உரை: அருட் பண்புடையார் அனைவரும் சமரச சன்மார்க்க நெறியைச் சேர்ந்தவராவர்; ஆதலால் அவரோடு கூடி அருள்நெறியில் நின்று இன்புற்று விளையாடி அருள்நலம் பெருகி வாழ்க என்று எனக்கு உரைத்தருளிய சற்குருவாகிய சிவனே! உயர் பொருளாகக் கருதப்படுகின்ற பெரிய கருணை நிறைந்த மெய்ப்பொருளாகிய சிவ பரம் பொருளே! போதாந்தம் முதலாக நிலவும் ஆறு அண்டங்களிலும் நிறைந்து விளங்கும் சிவ ஒளியே! உள்ளத்தில் மருளுடையவர்க்கு அம்மருளை நீக்கும் பொருட்டு அழகிய அம்பலத்தின்கண் விளக்க மிக்க திருநடனத்தைச் செய்கின்ற அருளரசே! என் சொல் மாலையையும் அணிந்தருளுக. எ.று.
அருளறமே சமரச சன்மார்க்கத்தின் உயிர் நாடியாதலால் அருளாளர் யாவரையும், “சமரச சன்மார்க்கம் அடைந்தவரே” என்று சாற்றுகின்றார். அறிவுக்குத் தெளிவும் ஒளியும் தரும் நெறியாதலின், “தெருளுடைய அருள் நெறி” என்று சிறப்பிக்கின்றார். அருள் நெறியில் நிற்பார்க்கு ஞானம் நிறைந்து இன்பம் செய்வதுபற்றி, “அருள் நெறியில் களித்து விளையாடிச் செழித்திடுக வாழ்க” எனச் சற்குரு உபதேசிக்கின்றார். அருளே சிவத்தின் திருவுருவாதலின் அதனை, “பொருளுடைய பெருங்கருணைப் பூரண மெய்ச் சிவமே” என்று விளம்புகின்றார். போதாந்த முதல் ஆறும் போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என வரும். இந்த ஆறு அந்தங்களிலும் பரசிவம் நிறைந்து விளங்குவது தோன்ற, மாறும் நிறைந்தொளிரும் ஒளியே” என்று உரைக்கின்றார். மருளுடையார் - ஒன்றைப் பிறிதொன்றாகக் கருதும் மயக்க உணர்வினர். மருளாவது பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் உணர்வு வகை. இம்மருள் நீங்கும் பொருட்டே இறைவன் அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்றான் என்ற குறிப்பு விளங்க, “மருள் நீக்க மணிப் பொதுவில் வயங்கு நடத்தரசே” என்று வழுத்துகின்றார். (75)
|