4165.

     வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
          மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
     பெம்மான்என் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த
          பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
     செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
          செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
     அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
          அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

உரை:

     விரும்பத் தக்க மாலைப் பொழுதில் சிறுவரோடு கூடி விளையாடித் திரிகின்ற மிக்க இளம் பருவத்திலேயே என்னை விரும்பி, நின்னையே நமது பெருமான் என்று கொண்டு உன் திருவடியே பொருளாகக் கொண்டு பாடும் திறத்தை எனக்கருளிய சிவபெருமானே! யான் செய்த பெரிய தவத்தின் பயனாக விளங்குபவனே! இளமைச் செருக்கால் செம்மாந்திருந்த சிறியவனாகிய என்னைச் சிறுமை விளைவிக்கும் நெறிகளில் சிறிதளவும் செல்லவிடாமல் பெருநெறியாகிய சிவநெறியின்கண் செல்வித்த நல்ல துணைவனே! அம்மானே! என் உயிர்க்குச் சிறந்த பெரும்பொருளே! அம்பலத்தின்கண் ஆடல் புரியும் அருளரசே! என் சொல் மாலையையும் ஏற்றுத் தோளில் அணிந்தருளுக. எ.று.

     வெம்மாலை - வெம்மையையுடைய மாலைப் பொழுது. வெம்மை விரும்பப்படும் தன்மை. வியந்து - சிறப்பாகக் கொண்டனைத்து. பெருமான் என்பது பெம்மான் என வந்தது. மிக்க இளம் பருவத்திலேயே சிவனடியே சிந்திக்கும் செம்மைநெறி தமக்கு எய்திய திறத்தை வடலூர் வள்ளல் இதனால் தெரிவித்தருளுகின்றார். இச் சிறப்பு முன் செய்த பெரிய தவப்பயனாகத் தமக்கு உண்டாயினமை தெரிவிப்பாராய், “நான் செய்த பெருந் தவமெய்ப் பயனே” என்று நவில்கின்றார். செம்மாப்பு - இளமைப் பருவத்தில் எதனையும் மதியாதொழுகும் இளமைச் செருக்கு. சிறுநெறி - சிறுமையை உண்டு பண்ணும் தீநெறி. பெருநெறி - பெருமையை உண்டுபண்ணும் சிவநெறி. அம்மான் - தலைவன். உயிரின்கண் உயிராய் நின்று உணர்வு நல்கி உய்தி பெறச் செய்வதுபற்றிச் சிவ பரம்பொருளை, “என் ஆவிக்கான பெரும் பொருளே” என்று இசைக்கின்றார். அலங்கல் - மாலை; ஈண்டுச் சொல்மாலை மேற்று.

     (76)