4166. ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
உரை: ஆணவமாகிய இருள் நிறைந்த அறையின்கண் செயலின்றிக் கிடந்த சிறுமையுடையவனாகிய என்னை அழகிய மாயை என்னும் ஒளியுடைய அறையின்கண் இருக்கவைத்து அறிவு தந்து நெடிய புதுமை கொண்ட தத்துவங்களாகிய அழகிய மாடத்தின் மேலேற்றி நிறைந்த அருள் ஞானமாகிய அமுதத்தை வழங்கி நிலை பேறு பொருந்த வாழ்வித்துச் சிறப்புண்டாக நலங்கள் எல்லாவற்றையும் கொடுத்து உலகவர் அறிய மணிமுடி சூட்டி யருளிய என் வாழ் முதலாகிய பதிப்பொருளே! பெருமை பொருந்திய சிற்சபையிலும் பொற்சபையிலும் விளங்குகின்ற நடம் புரிகின்ற அருளரசே! என் சொல் மாலையை அணிந்து மகிழுக. எ.று.
கேவலத்தில் ஆணவ மலவிருள் சூழ்ந்து செயலின்றிக் கிடந்த நிலையை, “ஆணவமாம் இருட்டறையில் கிடந்த சிறியேனை” எனவும், சகலாவத்தையில் மாயா காரியமாகிய உடம்பின்கண் புகுந்து இருந்தமை விளங்க, “அணிமாயை விளக்கறையில் அமர்த்தி” எனவும், உயிரறிவை விளக்கினமை புலப்பட, “அறிவளித்து” எனவும், முப்பத்தாறாகிய தத்துவங்களில் படிப்படியாக உயர்ந்து ஞான மெய்தினமை தெரிவித்தற்கு, “நீணவமாம் தத்துவப் பொன் மாட மிசையேற்றி நிறைந்த அருளமுது அளித்து” எனவும், சுத்த நிலையைப் பெறுதற்கமைந்த நிலை உண்டாகச் செய்தமை பற்றி, “நித்தமுற வளர்த்து” எனவும், சிவமாம் தன்மை பெற ஞானம் தந்த நலத்தைப் பற்றி, “மாணுற எல்லா நலமும் கொடுத்து” எனவும், சிவன்முத்தர் என்று சான்றோர் சிறப்பிக்கச் செய்தமையால், “உலகறிய மணிமுடியும் சூட்டிய என் வாழ்முதலாம் பதியே” எனவும் இசைக்கின்றார். ஞானசபை பொன் வேயப்பட்டிருத்தலின், பொற்சபை எனவும் வழங்கும். இசை - சொல் மாலை (77)
|