4167. பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
மீன்மறுத்துச் சுடர்மயமாம் விளங்கியதோர் விண்ணே
விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
உரை: உண்ணத் தரும் பாலை மறுத்து வெளியே ஓடி விளையாடும் சிறு பருவத்திலே சொல்லப்படுகின்ற உலகாசை சிறிதும் பதியாத என் உள்ளத்தில் மயக்கம் நீக்கி விளக்கமுடைய திருவைந்தெழுத்தைப் பதியுமாறு வைத்த பெருவாழ்வு நல்கும் பெருமானே! என் வாழ்வில் பொருந்திய சுகப் பொருளே! விண்மீன்களின்றி ஒளி மயமாய் விளங்குகின்ற ஆகாயமே! விண்ணுலகுகள் எண்ணிறந்தன தன்னுள் அடங்க விரிந்து நிற்கின்ற பெருவெளியே! உடம்பை வெறுத்த பெரிய தவ முதல்வர்க்கு ஒளி வடிவம் கொடுத்து உயர்ந்தோங்குகின்ற நடம் புரியும் அருளரசே! எனது சொல் மாலையையும் அணிந்தருளுக. எ.று.
தாயர் தரும் பாலுணவை உண்ண மறுத்து ஓடி விளையாடும் இளங்குழவி பருவத்தை, “பான் மறுத்து விளையாடும் சிறு பருவம்” என்றும், உலகப் பொருள்களின் மேல் ஆசை பதியாமல் தூயதாய் இருக்கும் குழவி உள்ளத்தை விதந்து, “பகரும் உலகிச்சை ஒன்றும் பதியாது என் உளம்” என்றும் பகர்கின்றார். பதியாத என் உளம் என்பது பதியாது என் உளம் என்று வந்தது. மான் - மயக்கம்; பிறப்பால் உளதாகும் மையல். உள்ளத்தில் படியும் பிறவி மையலை நீக்கிச் “சிவாய நம” என்னும் ஐந்தெழுத்தைப் பொருளுறக் கற்பித்து வாழ்வித்தமை புலப்பட, “ஐந்தெழுத்தே பதிய வைத்த பெருவாழ்வே” எனவும், அவ்வாழ்வின்கண் ஐந்தெழுத்தை ஓதிப் பெறும் இன்ப அனுபவத்தை, “வாழ்விலுறும் சுகமே” எனவும் இயம்புகின்றார். விண்மீன்களின் ஒளிகளைத் தனக்குள் அடக்கிப் பேரொளி மயமாய் விளங்குகின்ற ஆகாயத்தை, “சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே” என்றும், விண்ணுலகங்கள் மிகப் பலவாதலால் அவை எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி விரிந்து பரந்து ஓங்கும் பராகாசத்தை, “விண் அனந்தம் உள்ளடங்க விரிந்த பெருவெளி” என்றும் பேசுகின்றார். சிவாகமங்களில் நிவிர்த்தி முதலிய கலை ஐந்தனுள் ஒவ்வொன்றினுள்ளும் மிகப்பல புவனங்களும், அப்புவனங்கள்தோறும் ஆகாயங்களும் என எண்ணிறந்தன கூறப்படுதலால், “விண் அனந்தம்” என விளம்புகின்றார். ஊன் மறுத்த பெருந்தவர் என்றது, உடல் வாழ்க்கையை வெறுத்த மணிவாசகர் முதலிய பெருந் தவச்செல்வர்களை என அறிக. “ஊனாறும் உயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே” என்று திருவாசகம் ஓதுவது காண்க. மாணிக்க வாசகர் சிவப் பேறு பெற்ற போது ஒளி வடிவம் பெற்றாரென்று புராணம் கூறுதலால், “ஒளி வடிவம் கொடுத்தோங்கும் நடத்தரசே” என்று உரைக்கின்றார். (78)
|