4168. மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
எங்கணும்ஓர் நீக்கம்அற எழுந்தபெருஞ் சுகமே
அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
உரை: உடம்பாலும் உயிராலும் உடம்பினுள் மிக்கு நிற்கும் மனம் முதலிய கரணங்களாலும் நல்கும் இன்பமும், உடம்பின் நீங்கி மேலுலகங்களில் உள்ள இந்திர பதம் முதலியவற்றில் பெறப்படும் இன்பங்களும், அவற்றிற்கெல்லாம் மேலதாகிய முத்தி இன்பமுமாகிய எவ்வகை இன்பங்களும் தன்னிடத்தே எழுவதாகிய இன்பமேயாக எவ்விடத்தும் ஒரு சிறிதும் நீக்கமின்றி உளதாகிய பேரின்பமான பொருளே! அவ்வின்பத்தை அடையும் ஞானமும், அதனை அடைந்த முத்தர்களும் காட்டமாட்டாத அகப் பொருளாய், அது வேறு தான் வேறின்றி அதுவதுவாய் அதற்கப்பாலாய்ச் சிறந்து விளங்கும் பரம்பொருளே!
உலகியற் பொய்யின்பத்தை விரும்பாத தூயவர்களாகிய சான்றோர்கள் மகிழ்ந்து துதிக்கும் அம்பல நடனத்தையுடைய அருளரசாகிய சிவனே! யான் சொல்லுகின்ற சொல் மாலையையும் ஏற்று அணிந்தருளுக. எ.று.
உடம்பாலும் - உடம்பின்கண் உள்ள மனம் முதலிய கரணங்களாலும் அவற்றை இயக்கும் உயிராலும் விளையும் சுகத்தை, “மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும், மிகுங் கரணச் சுகமும்” என்று மொழிகின்றார். உயிரோடு கூடிய உடம்பின்கண் பெறலாகும் இன்பத்தை எடுத்துக்காட்டுவது, அந்தக் கரணமாதலால் அதனை, “மிகுங் கரணம்” என்று சிறப்பிக்கின்றார். தேவ பதம், இந்திர பதம், பிரம பதம், வைகுந்த பதம், சிவ பதம் எனப் பலவாக ஓதப்படுதலால் அவற்றைப் பொது வகையில், “விளங்கு பதம்” எனவும், எல்லாப் பதங்களுக்கும் மேலது முத்தி பதமாதலால் அதனை, “மேல் வீட்டுச் சுகம்” எனவும் கூறுகின்றார். இப்பதங்களில் நுகரப்படும் இன்பங்கள் யாவும் பரம்பொருளின் பரம சுகத்தில் விளைந்தன என வற்புறுத்தற்கு, “எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகமாக எங்கணும் ஓர் நீக்கமற எழுந்த பெருஞ் சுகமே” என்று கூறுகின்றார். பெருஞ் சுகத்தைத் தரும் சிவ பரம்பொருளைப் “பெருஞ் சுகம்” என்று குறிக்கின்றார். மேற்கூறிய பதவின்பங்களைப் பெறுதற்கு, ஞானம் இன்றியமையாதாதலால், அந்த ஞானத்தாலும் அந்த ஞானத்தைப் பெற்ற ஞானிகளாலும் காட்டவொண்ணாதது பரசிவப் பொருள் எனவும், அதற்குக் காரணம் பரஞானமாய்ப் பரம்பொருள், பரஞானம், பரஞானி என்ற வேறுபாடின்றி எல்லாமாய் விளங்குவது தோன்ற, “அதுவதுவாய்” எனவும், அந்நிலைக்கும் அப்பாலாய் உளதாதல் பற்றி, “அப்பாலாம் பொருளே” எனவும் இயம்புகின்றார். நிலையில்லாத உலக போகங்களால் உளதாகும் சுகம் நிலை யில்லாத பொய்த்தன்மையுடையதாதலால் அது “பொய்ச் சுகம்” எனப்படுகிறது. புனிதர் - உண்மை ஞானத்தால் தூயராகிய உயர்ந்தோர். (79)
|