4169. அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கலத்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
வெளிஞான வெளிமுதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
உரை: அண்ட கோடிகள் எத்தனையோ, அத்தனை அண்டங்களிலும், அவற்றின்கண் உள்ள உயிர் வகைகள் எத்தனையோ அத்தனையிலும், அவற்றால் காணப்பட்ட பொருள்கள் எவ்வளவோ அவ்வளவு பொருள்களிலும், அவை எல்லாவற்றிலும் பரம்பொருள் கலந்திருக்கும் கலப்பு வகை எத்தனையோ அத்தனையிலும் முற்ற நிறைந்து விண்வெளி போன்ற ஒப்பற்ற நாதவெளியிலும், சுத்த வெளியிலும், மோன வெளியிலும், ஞான வெளியிலும் முதலிய ஏனை வெளிகளிலும் முற்றவும் நிரம்பிக்கொண்டு அவ்வெளியாய் விளங்குவது சுத்த சிவமயம்; அம்மயமே பொருந்திய நடராசனே! என்னுடைய குற்றம் பொருந்திய சொல் மாலையையும் ஏற்று அருளுவாயாக. எ.று.
ஒன்றாதலும் உடனாதலும் வேறாதலும் எனக் கலப்பு பல வகைப்படுதலால், “கலந்த கலப்பு எவ்வளவோ” என்று கூறுகின்றார். இக்கலப்பு வகையைச் சமவாயம் எனவும், சையோகம் எனவும், சமீயுத்த சம்யோகம் எனவும் வடநூல்களில் கூறுவர். நாதவெளி என்பது சுத்த தத்துவத்தின் மத்தகத்தில் விளங்குவது பற்றி, “விண் தகும் ஓர் நாதவெளி” என்றும், சுத்த தத்துவம் ஐந்தையும் தனக்குள் கொண்டது சுத்த வெளி எனவும் அறிக. வாக்குத் தத்துவத்தின் எல்லைக்கு அப்பாலது மோன வெளி; மோன நிலையின்கண் விளக்கமுறுவது ஞானவெளி; ஞான வெளியும், பரஞான வெளி அபர ஞான வெளி என்பன முதலாக விரிதலால், “ஞான வெளி முதலாம் விரிதலால், “ஞான வெளி முதலாம் வெளிகள்” என்று கூறுகின்றார். இவ்வெளிகள் எல்லாவற்றிலும் கலந்து அவ்வெளியேயாய் விளங்குவது புலப்பட, “வெளிகள் எலாம் நிரம்பிக் கொண்டு அதுவாய் விளங்குகின்ற சுத்த சிவ மயமே” என்று சொல்லுகின்றார். (80)
|