4170.

     சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
          தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
     இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
          எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
     அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
          தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
     சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
          தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

உரை:

     சத்திய உலகிலுள்ள பிரமர்கள், வைகுந்தத்தில் உள்ள நாரணர்கள் மற்றும் உள்ளவர்களாகிய தலைவர்களும், அவரவர் உலகைச் சேர்ந்தவர்களும், மற்றவர்களும், திசை தோறும் உள்ளனவாகக் கூறப்படும் கோடிக் கோடியான அண்டங்களில் வாழும் உயிர் வகைகளும் அத்தனைப் பேரும் அள்ளி உண்டாலும் அணுவளவும் குறையாத அருளின்ப வெளியில் ஒளி வடிவாய் இன்ப மயமாய்ச் சுத்த சிவானு போதமாய் விளங்குகின்ற பரசிவமாகிய தெளிந்த அமுதமாகியவனே! தூய நடம் புரிகின்ற பெருமானே! என் சொல் மாலையை மகிழ்ந்து அணிந்தருளுவாயாக. எ.று.

     சத்திய லோகத்துக்குத் தலைவராதலின் பிரமர்களை, “சத்திய நான்முகர்” எனக் கூறுகின்றார். நாரணர் வைகுந்தத்தில் இருப்பவராதலின் வைகுந்தம் என்பது அறிவிக்கப்பட்டது. சிவபதத்தில் அனந்த சிவர் முதலியோரும், இந்திர பதத்தில் இந்திரரும் எனப் பதந்தோறும் தலைவர் பலர் கூறப்படுவது பற்றி, “மற்றுளவாம் தலைவர்” என உரைக்கின்றார். திசை தோறும் அண்டப் பகுதிகள் உளவாக, நூல்கள் கூறுதலால் “இத்திசை அத்திசையாக இசைக்கும் அண்டப் பகுதி” என இயம்புகின்றார். அவை கோடிக் கணக்கினவாதல் தோன்ற, “அண்டப் பகுதி எத்தனையோ கோடி” என்று அறிவிக்கின்றார். அத்தனை பேர் உண்டாலும் அணுவளவும் குறையாது விளங்கிய தெள்ளமுதே என இயையும். தெள்ளமுதுமாகிய சிவத்துக்கு இடமும் வெளியும் தன்மையும் கூறுவாராய், “அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய்ச் சுத்த சிவானுபவமாய் விளங்கிய தெள்ளமுதே” என்று மொழிகின்றார். சொல் - சொல்மாலை.

     (81)